திருப்பதி: திருமலையில், நேற்று மாலை முதல் வருடாந்திர தெப்போற்ஸவம் விமரிசையாக துவங்கியது.
திருமலையில், ஆண்டுதோறும் மாசி மாத பவுர்ணமியை ஒட்டி வருடாந்திர தெப்போற்ஸவத்தை தேவஸ்தானம் நடத்தி வருகிறது. அதன்படி, நேற்று முதல் திருமலையில் உள்ள ஸ்ரீவாரி திருக்குளத்தில் ஏழுமலையான் தெப்போற்ஸவம் விமரிசையாக துவங்கியது. அதன் முதல் நாளான நேற்று மாலை, 6 மணி முதல் 7 மணிவரை சீதா,லட்சுமண ஆஞ்சநேய சமேத ஸ்ரீராமசந்திரமூர்த்தி 5 முறை தெப்பத்தில் வலம் வந்தார். இதை முன்னிட்டு, திருமலையில் உள்ள திருக்குளம் மற்றும் தெப்பம் 6 டன் மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. திருமலை முழுவதும் மின்விளக்கு அலங்காரங்களும் செய்யப்பட்டுள்ளது. இதற்கான அண்டை மாநிலங்களிலிருந்து பல வகையான மலர்கள் தருவிக்குப்பட்டது. தெப்போற்ஸவத்தை முன்னிட்டு, நேற்று வசந்தோற்ஸவம், ஆர்ஜித பிரம்மோற்ஸவம், சகஸ்ரதீபாலங்கரா சேவை உள்ளிட்டவற்றை தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது. மாடவீதியில் வலம் வந்த பின் உற்ஸவமூர்த்திகள் நேரடியாக திருக்குளத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர். இதில் தேவஸ்தான அதிகாரிகள் கலந்து கொண்டனர்.