பதிவு செய்த நாள்
07
மார்
2020
02:03
உடுமலை:உடுமலை, சின்னவீரம்பட்டி உச்சையினி மாகாளியம்மன் கோவிலில் நடந்த, கும்பாபிஷேக விழாவில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.உடுமலை அருகே சின்னவீரம்பட்டியில், உச்சையினி மாகாளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில், கும்பாபிஷேக விழா கடந்த 4ம்தேதி முளைப்பாலிகை மற்றும் தீர்த்தம் எடுத்தலுடன் துவங்கியது. அன்று, காலை திருவிளக்கு வழிபாடு, முளைப்பாலிகை வழிபாடும், இரவு, வள்ளி கும்மியாட்டம் நிகழ்ச்சியும் நடந்தன. நேற்றுமுன்தினம் காலை, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் நடந்தது. திருமுறை விண்ணப்பம், பேரொளி வழிபாடு மாலையில், பக்தி இன்னிசை நிகழ்ச்சிகள் நடந்தன.நேற்று அதிகாலை, 4:00 மணிக்கு காப்பு அணிவித்தலை தொடர்ந்து, 5:30 மணிக்கு மலர் அர்ச்சனை நடந்தது. காலை, 6:45 மணிக்கு திருக்குடங்கள் ஞான உலா வந்தது. காலை, 7:00 மணிக்கு கும்பாபிஷேக சடங்குகள் துவங்கின. பின்னர் உச்சையினி மாகாளியம்மனுக்கு கும்பாபிஷேகம் செய்யப்பட்டு, பக்தர்களுக்கு தீர்த்தம் தெளிக்கப்பட்டது.சுற்றுப்பகுதி கிராமங்களிலிருந்தும், பக்தர்கள் திரளாக பங்கேற்று, வழிபட்டனர். கும்பாபிஷேக விழாவில், பேரூராதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகள், கவுமார மடாலயம் குமரகுருபர சுவாமிகள், சின்னதொட்டிபாளையம், அண்ணாமலையார் பீடம் அருள்முருகன் அடிகள் பங்கேற்றனர். தொடர்ந்து, பெருந்திருமஞ்சனம், அலங்கார பூஜையும், பேரொளி வழிபாடும், அன்னதானமும் நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை, திருப்பணிக்குழுவினர் மற்றும் ஊர்ப்பொதுமக்கள் செய்திருந்தனர்.