பதிவு செய்த நாள்
07
மார்
2020
02:03
மேட்டுப்பாளையம்: காரமடை அரங்கநாதர் கோவிலில், இன்று (மார்.,7) திருக்கல்யாண உற்சவம் நடந்தது. நாளை காலை ஸ்ரீதேவி, பூதேவி, சமேதராக அரங்கநாத பெருமாள் தேரில் எழுந்தருளிய பின்பு, மாலை, 4 மணிக்கு தேரோட்டம் நடைபெற உள்ளது.
கோவை மாவட்டம், காரமடை அரங்கநாதர் கோவிலின் தேர் திருவிழா கடந்த, 2ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இன்று அதிகாலை, 4 மணிக்கு மூலவருக்கு திருமஞ்சனம் நடந்தது. பின்பு உற்சவ மூர்த்தியான அரங்கநாத பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக, ரங்கநாயகி தாயார் சன்னதி முன்பு உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் முத்துப்பந்தலில் எழுந்தருளினார். அர்ச்சகர்கள் ரங்கநாதன், சுரேஷ் நாராயணன், திருவேங்கடம் ஆகியோர் திருமண வைபவத்தை நடத்தினர். அரங்கநாத பெருமாளுக்கு பூணூல் அணிவிக்கப்பட்டு, ஸ்ரீதேவி, பூதேவிக்கும் கங்கணம் கட்டினர். ஸ்தலத்தார் திருமலை நல்லான் சக்கரவர்த்தி, வேத வியாசர் ஸ்ரீதர் பட்டர், திருப்பல்லாண்டு பாசுரங்கள் சேவித்து மஞ்சள் இடித்தனர். பின்பு யாகம் நடத்தப்பட்டு அர்ச்சகர்கள் கையில் மாலையை ஏந்தி, நடனமாடி மாலைமாற்றும் வைபவம் நடத்தினர். பின்பு சுவாமிகள் முன்பு பிரணவம் வாசிக்கப்பட்டது. திருமாங்கல்யம் பூஜையில் மாங்கல்ய தாரணம் நடந்தது. ஸ்தலத்தார் வாரணம் ஆயிரம் பாசுரங்களையும் செய்வித்தனர்.
சாற்றுமுறையை அடுத்து திருமண கோலத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக அரங்கநாத பெருமாள் கோவிலின் உள்ளே வலம் வந்து, தேர் செல்லும் நான்கு ரத வீதிகள் வழியாக வலம் வந்து கோவிலை அடைந்தது. திருக்கல்யாண வைபவம் நிகழ்ச்சியில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர். பக்தர்களுக்கு மாங்கல்ய சரடு வழங்கப்பட்டது.