பதிவு செய்த நாள்
07
மார்
2020
02:03
மாமல்லபுரம்: இருளர் பழங்குடிகள், குலதெய்வம் கன்னியம்மனை வழிபட, மாமல்லபுரத்தில் முகாமிட்டுள்ளனர். மாமல்லபுரத்தில் உள்ள ஸ்தலசயன பெருமாள் வழிபாடு, பல்லவர்கால சிற்பங்களை காண, பயணியர் சுற்றுலா வருகின்றனர்.இது ஒருபுறமிருக்க, இருளர் பழங்குடிகளின், குலதெய்வம் கன்னியம்மன் வழிபாட்டிற்கும், இவ்வூர் சிறப்பு பெற்றது. செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், கடலுார், திருவண்ணாமலை, வேலுார், ஆந்திர, கர்நாடக பகுதிகளில், இருளர் வசிக்கின்றனர். பாம்பு பிடித்தல், விஷமுறிவு மருந்து தயாரிப்பு, விறகு சேகரிப்பு, இவர்களின் பரம்பரை தொழில். செங்கல் சூளை, அரிசி ஆலையில், கூலிகளாகவும் உள்ளனர்.இவர்களின் குலதெய்வம் கன்னியம்மன், வங்க கடலில் வீற்றிருப்பதாக, இவர்கள் நம்புகின்றனர்.
எனவே, மாசி மக நட்சத்திர நாளில், அம்மனை வழிபட, மாமல்லபுரம் கடற்கரையில், சில நாட்கள் முன்பே, குடும்பத்தினர், உறவினர் என, கூடுவர். கடற்கரையில், அம்மனை வழிபட்டு, திருமணம், நிச்சயம் என, நடத்துவர்.காது குத்தல், தலைமுடி நீக்கம் என, வேண்டுதல் நிறைவேற்றுவர்; பாரம்பரிய சடங்குகள் நடத்துவர்.மாசி மகமான, நாளை மறுநாள் வழிபட, தற்போது, இங்கு முகாமிட்டுஉள்ளனர். பேரூராட்சி நிர்வாகம், இவர்களுக்கு, தற்காலிக குடிநீர் வசதியை ஏற்படுத்தி கொடுத்து உள்ளது.