செஞ்சி: செஞ்சி சங்கராபரணி ஆற்றங்கரையில் உள்ள கோதண்டராமர் கோவிலில் நடந்த மாசிமக தீர்த்தவாரியில் பல்வேறு கோவில்களில் இருந்து வந்த உற்சவர்களுக்கு தீர்த்தவாரி நடந்தது.
செஞ்சி சங்கராபரணி ஆற்றங்கரையில் உள்ள கோதண்டராமர் கோவிலில் நேற்று மாசி மக தீர்த்தவாரி நடந்தது.இதில் சிங்கவரம் ரங்கநாதர் கோவில் ஸ்ரீதேவி, பூதேவி, சமேத ரங்கநாதர், செஞ்சி ஏகாம்பரேஸ்வரர் கோவில் காமாட்சியம்மன் சமேத ஏகாம்பரேஸ்வரர், செஞ்சி கோட்டை வெங்கட்ரமணர் கோவில் ஸ்ரீதேவி, பூதேவி, சமேத வெங்கட்ரமணர், பெரியகரம் சிவசுப்பிரமணியர் கோவில் வள்ளி, தெய்வயானை, சமேத சுப்பிரமணியர், பெரியகரம் முத்துமாரியம்மன், திருவத்திமலை ஸ்ரீதேவி பூதேவி சமேத வெங்கடாஜலபதி, இல்லோடு ஏலவார்குழலி சமேத ஏகாம்பரேஸ்வரர் கோதண்டராமர் கோவில் வளாகத்தில் எழுந்தருளினர். அனைத்து உற்சவர்களுக்கும் நேற்று பகல் 12.00 மணியளவில் சங்கராபரணி ஆற்றில் தீர்த்தவாரி நடந்தது. தீர்த்தவாரி நடந்த போது நூற்றுக்கணக்கான பக்தர்கள் சங்கராபரணி ஆற்றில் புனித நீராடினர். பல்வேறு ஊர்களில் இருந்து வந்த பஜனை கோஷ்டியினரின் பஜனை மற்றும் ஆன்மிக சொற்பொழிவு நடந்தத. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர். இதில் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.