பதிவு செய்த நாள்
04
மே
2012
02:05
வித்தியாரண்யர் பிரம்மசாரியாக இருந்த காலத்தில் பரம ஏழையாக இருந்தவர். மகாலட்சுமியைக் குறித்து கடுமையான தபஸ் பண்ணினார். மகாலட்சுமி பிரசன்னமானாள். உனக்கு என்ன வேண்டும்? என்று கேட்டபோது, உலகத்தில் யாரிடத்திலும் இல்லாத அளவு ஐசுவரியத்தைக் கொடு என்று இவர் கேட்டார். மகாலட்சுமி, அப்பா உனக்கு இந்த ஜன்மத்தில் ஐசுவரியம் கிடைப்பதற்கு இல்லையே; வேண்டுமானால் அடுத்த ஜன்மாவில் கொடுக்கிறேன் என்று சொன்னாள். வித்தியாரண்யர் உடனே சன்னியாசம் வாங்கிக் கொண்டு, சன்னியாசம் வாங்கிக் கொண்டால் சாஸ்திரப்படி மறு ஜன்மமாகப் போய்விடாதா? இப்போது ஐசுவரியத்தைக் கொடு என்றார். மகாலட்சுமியும் சொர்ணத்தை வர்ஷித்தாள். நிலம் முழுக்க எங்கே பார்த்தாலும் ஒரே தங்கமாக நவநிதியும் தெரிந்தது. அவற்றைப் பார்த்தவுடன் வித்தியாரண்யர், ஆசிரமம் வாங்கிக் கொண்டபின் நமக்குத் தங்கம் எதற்காக? சன்னியாச ஆசிரமத்தில் இதைத் தொடவும் கூடாதே என்று அழுதாராம்.
அப்போதுதான் மாலிக்காபூர் தென்னாட்டுக்குப் படையெடுத்து வந்து, எல்லா ராஜ்யங்களும் எல்லா கோயில்களும் சிதறுண்டு போகும்படியாக பண்ணிவிட்டுப் போயிருந்தான். சரி, இந்த ஐசுவரியத்தைக் கொண்டு அவற்றை எல்லாம் ஒழுங்கு செய்வது என்று வித்தியாரண்யர் தீர்மானம் பண்ணிக் கொண்டார். அப்போது அங்கே ஹரிஹரன் - புக்கன் என்ற இரண்டு பேர் அண்ணன், தம்பி ஆடு மேய்த்துக் கொண்டிருந்தார்கள். அந்த இரண்டு குறும்பர்களையும் அழைத்து, அந்த துங்கபத்திரை பிரதேசத்திலேயே ஒரு ராஜ்யத்தை ஸ்தாபித்து, அதற்கு ராஜாக்களாக அவர்களை ஏற்படுத்தினார். அந்த ராஜ்யம்தான் விஜயநகர சாம்ராஜ்யம்.