திருப்பதி: திருமலை திருப்பதிக்கு தினமும் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். கட்டணம் செலுத்தியும் இலவசமாகவும் தரிசனம் செய்யவும் வரும் பக்தர்கள் காத்திருப்பு அறையில் பல மணி நேரம் காத்திருந்து பின் பெருமாளை தரிசிக்க செல்வர்.
கொரோனா நோய் பரவல் காரணமாக பக்தர்கள் ஒரே இடத்தில் கூடி இருப்பது நல்லது அல்ல என்ற சுகாதாரத்துறையின் அறிவுறுத்தல் காரணமாக வருகின்ற 17ம்தேதி முதல் காத்திருப்பு அறைகள் அனைத்தும் தற்காலிகமாக மூடப்படுகிறது. பக்தர்கள் அடிவாரத்தில் உள்ள அலிபிரி,ஸ்ரீவாரி மெட்டு போன்ற இடங்களில் தெர்மல் ஸ்கேன் வைத்து சோதனை செய்யப்பட்ட பிறகு அனுமதி சீட்டு பெறுமிடத்திற்கு அனுமதிக்கப்படுவர்.அங்கு எந்த நேரத்தில் தரிசனம் செய்யலாம் என சீட்டு வழங்கப்படும் அந்த நேரத்திற்கு சரியாக சென்றால் எங்கும் காத்திருக்காமல் நேரடியாக சென்று பெருமாளை தரிசித்துவிட்டு திரும்பலாம். பக்தர்கள் தங்கும் அறை ஒதுக்குவதிலும் நிறைய கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டு உள்ளது பக்தர்கள் தங்குவதற்கு முன்பாக அந்த அறைகள் பல முறை சுத்தம் செய்யப்பட வேண்டியிருப்பதால் ஏற்படும் சிரமங்களுக்கு பக்தர்கள் ஒத்துழைக்க வேண்டும். கோதண்டராமர் சுவாமி கோவிலில் நடைபெற இருந்த சீதா ராமா கல்யாண உற்சவம் ரத்து செய்யப்படுகிறது.மும்பையில் திருப்பதி கோவில் கட்டுவதற்கான பூமி பூஜை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைக்கப்படுகிறது. தெய்வ பலத்தோடு கோரொனாவை வெல்ல வேண்டும் என்பதற்காக வருகின்ற 19,20,21 ஆகிய தேதிகளில் திருமலையில் மகாயாகம் நடைபெறுகிறது.