பதிவு செய்த நாள்
16
மார்
2020
12:03
காரைக்குடி:காரைக்குடி முத்துமாரியம்மன் கோயிலில் மாசி பங்குனி திருவிழாவை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் பால்குடம், அலகு குத்தி, காவடி எடுத்து நேர்த்தி செலுத்தினர்.
இக்கோயிலில் மார்ச் 10 ம் தேதி கொடியேற்றம், காப்பு கட்டுடன் மாசி பங்குனி திருவிழா துவங்கியது. அன்றைய தினம் பக்தர்கள் காப்பு கட்டி விரதத்தை துவக்கினர். விழா துவங்கிய நாள் முதலே பக்தர்கள் பால்குடம் எடுத்தல், அலகு குத்துதல், தீச்சட்டி எடுத்தல் உள்ளிட்ட நேர்த்திக்கடன்களை செலுத்தி வருகின்றனர். நேற்று ஞாயிறு விடுமுறை என்பதால், பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து காணப்பட்டது. இதற்காக நேற்று அதிகாலை 3:00 மணிக்கெல்லாம் பக்தர்கள் பால்குடம், அக்னிசட்டி எடுத்து நகர் முழுவதும் சுற்றி வந்து, கோயிலை அடைந்தனர்.இதற்காக முத்தாலம்மன் கோயில் குளத்தில் நீராடி அங்கிருந்து பால்குடம், தீச்சட்டி, அலகு குத்தியும் நேர்த்திக்கடனை துவக்கினர்.
அங்கிருந்து மகர்நோன்பு பொட்டல், முதல் போலீஸ் பீட், வ.உ.சி., ரோடு வழியாக முத்துமாரியம்மன் கோயிலை அடைந்து, அம்மனுக்கு பால் அபிஷேகம் செய்தனர்.
விழாவின் முக்கிய நிகழ்வாக மார்ச் 17 ல் இரவு 7:00 மணிக்கு கரகம் எடுத்தலல், காவடி, பூக்குழி இறங்குதல், பால்குடம் எடுக்கப்படும். அன்று மாலை 4:00 மணிக்கு கோயில் கரகம், மதுக்குடம் எடுக்கும் நிகழ்ச்சி நடக்கும். மார்ச் 19 ல் அம்மன் திருவீதி உலா வருவார். மார்ச் 20 ல் அம்மனுக்கு சந்தனக்காப்பு அலங்காரம் நடைபெறும். காரைக்குடி டி.எஸ்.பி., அருண் தலைமையில் நுாற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கோயில் செயல் அலுவலர் சுமதி தலைமையில் ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.