புவனகிரி : புவனகிரியில் நேற்று நடந்த மாசி மகத்திருவிழாவில் சுற்றுபகுதியினர் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று பூவராகசுவாமியை தரிசனம் செய்தனர்.
வர்த்தக சங்கத்தினர் சிறப்பு வரவேற்பளித்தனர். கடலுார் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற திருத்தலம் ஸ்ரீமுஷ்ணம் பூவராகசுவாமி கோவில். இக்கோவிலின் உற்சவமூர்த்தியான யக்ஞவராகர் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக மாசி மாதத்தில் கிள்ளை முழுக்குத்துறை கடலில் தீர்த்தவாரி உற்சவம் நடைபெறுவது வழக்கம். சுவாமி ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக கடந்த 9ம் தேதி கிள்ளை தீர்த்தவாரிக்கு எழுந்தருளினார். அங்கு முஸ்லிம்கள் சார்பில் தைக்காலில் மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி சிறப்பு வரவேற்பளித்தனர்.
கிள்ளை முழுக்குத்துறை தீர்த்தவாரி முடிந்து, பல்வேறு பகுதியில் பக்தர்களுக்கு அருள் பாலித்த நிலையில் நேற்று முன்தினம் புவனகிரி அக்கரஹாரத் தெருவில் உள்ள மண்டபத்தில் எழுத்தருளி மண்டப்படி நடந்தது. நேற்று முன்தினம் இரவு பல்லக்கில் சுவாமி புறப்பாடாகி, புவனகிரி கடைவீதி மண்டகப்படிக்கு எழுத்தருலினார்.அங்கு வர்த்தக சங்கத்தினர் சிறப்பு வரவேற்பளித்தனர். நேற்று காலை முதல் ஆரிய வைசிய மண்டபத்தில் பூவராகசுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பக்தர்கள் அர்ச்சனை செய்து சுவாமி தரிசனம் செய்தனர். புவனகிரி போலீஸ் இன்ஸ் பெக்டர் தேவி, சப் இன்ஸ் பெக்டர் டைமண்ட்துரை தலைமையில் போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டிருந்தனர்.