பதிவு செய்த நாள்
17
மார்
2020
12:03
மதுரை: வழிபாட்டு தலங்களில் கொரோனா வைரஸ் அறிகுறிகள் இருக்கிறதா என கண்காணித்த பின் பக்தர்களை அனுமதிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கையாக 1 முதல் 5 ம் வகுப்பு மற்றும் அங்கன்வாடி மையங்கள் மூடப்படும்,’’ என, மதுரையில் கொரோனா தடுப்பு ஆலோசனை கூட்டத்தில் கலெக்டர் வினய் தெரிவித்தார்.
கூடுதல் கலெக்டர் பிரியங்கா, டி.ஆர்.ஒ., செல்வராஜ், சுகாதார இணை இயக்குனர் சிவக்குமார், துணை இயக்குனர் பிரியா ராஜ், அரசு மருத்துவமனை டீன் சங்குமணி, உணவு பாதுகாப்பு அலுவலர் சோமசுந்தரம், கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் ராஜசேகரன், அமர்நாத், வானதி, ஊராட்சிகளுக்கான உதவி இயக்குனர் செல்லத்துரை மற்றும் அனைத்து துறை அதிகாரிகள் பங்கேற்றனர். கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கைகளை கையாண்டு அறிக்கை அளிக்க கலெக்டர் உத்தரவிட்டார். கலெக்டர் கூறியதாவது: கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கையாக முதல்வர் பழனிசாமி அறிவுறுத்தலின்படி 1 முதல் 5ம் வகுப்புகள், அங்கன்வாடி மையங்கள் மார்ச் 31 வரை மூடப்படும். அரசு, தனியார் நர்சரி, பிரைமரி பள்ளிகளை மூடவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அனைத்து துறை அதிகாரிகள் கொண்ட குழு அமைத்து கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்படுகிறது. ஷாப்பிங் மால்கள், தியேட்டர்கள் போன்ற மக்கள் கூடுமிடங்களில் சுகாதாரம் கடைபிடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுவரை மதுரையில் கொரோனா பாதிப்பு யாருக்கும் இல்லை. பொது இடங்களில் கூட்டம் சேருவதை தவிர்க்கவும், வழிபாட்டு தலங்களில் கண்காணித்து அனுமதிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. முககவசங்களை கூடுதல் விலைக்கு விற்றால் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டு உள்ளது, என்றார்.