ராமேஸ்வரம் : தினமலர் நாளிதழ் செய்தி எதிரொலியாக ராமேஸ்வரம் கோயிலில் பக்தர்களுக்கு கொரோனா பரிசோதனை மற்றும் தடுப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
தினமும் ஏராளமான வட, தென் மாநில பக்தர்கள் தரிசிக்கும் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காததால் பக்தர்கள், சுற்றுலாப் பயணிகள் அச்சம் அடைந்துள்ளதாக மார்ச் 15 ல் தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது.இதையடுத்து நேற்று இரு டாக்டர்கள், 10 சுகாதார ஊழியர்கள் கோயில் கிழக்கு நுழைவு வாசலில் பக்தர்கள் கைகளை சுத்தம் செய்தும், இன்ப்ராரெட் தெர்மா மீட்டர் கருவி மூலம் காய்ச்சல் உள்ளதா எனவும் பரிசோதித்தனர். கோயில் பிரகாரத்தில் கிருமி நாசினி மருந்து தெளித்தனர். இதில் கோயில் இணை ஆணையர் கல்யாணி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.ஆனால் கோயிலுக்கு வந்த பெரும்பாலான பக்தர்களை கண்டு கொள்ளவில்லை. மேலும் பக்தர்கள், போலீசார், தனியார் செக்யூரிட்டி காவலர்கள் முக கவசம் அணியவோ, கைகளை சுத்தம் செய்யவோ கோயில் நிர்வாகம், சுகாதாரத்துறை வற்புறுத்தவில்லை.