பதிவு செய்த நாள்
18
மார்
2020
12:03
தேவதானப்பட்டி: தேவதானப்பட்டி மூங்கிலணை காமாட்சியம்மன் கோயிலில் அமைந்துள்ள ஆதி காசி லிங்கேஸ்வரர் திருமணத்தடை நீக்கி வருகிறார்.
தேவதானப்பட்டி அருகே உள்ள மூங்கிலனை காமாட்சியம்மன் கோவிலில் மஞ்சளாற்றின் கரையில் அமைந்துள்ளது ஆதி காசி லிங்கேஸ்வரர் ஆலயம். இக்கோவில் மூங்கிலணை காமாட்சி அம்மன் வச்சிரதந்தன் என்ற அசுரனை வதம் புரிந்து வாதத்தினால் ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷம் நிவர்த்திக்காக முதன் முதலில் தன் மேலிருந்த உதிரத்தை மஞ்சள் நீரால் மஞ்சள் நீராடி சிவபூஜை செய்த இடம் என்று கூறப்படுகிறது. காசிக்கு இணையான இடம் என்பதால் காசியிலிருந்து லிங்கத்தைக் கொண்டு வந்தது ஆலயம் அமைத்து பிரதிஷ்டை செய்தனர். இக்கோயிலில் காசி லிங்கேஸ்வரர், விசாலாட்சி அம்மன், நால்வர் சன்னதி, அக்னி வீரபத்திரர் சன்னதி, சொர்ண ஆகர்ஷண பைரவர் சன்னதி, நவகிரக சன்னதி, ஆஞ்சநேயர் சன்னதி, தட்சிணாமூர்த்தி, பிரம்மா, துர்க்கை, சண்டிகேஸ்வரர் ஆகிய தெய்வங்கள் உள்ளன. இக் கோயிலில் பிரதோஷ வழிபாடு, கால பைரவருக்கு தேய்பிறை அஷ்டமியில் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது. இக்கோயிலில் திருமண தடை நீக்கம், வேலைவாய்ப்பு, குழந்தை பேருக்கு சிறப்பு பெற்ற ஸ்தலமாக விளங்குகிறது. இக்கோயில் தல விருட்சமாக மருத மரம் உள்ளது. மேலும் விவரங்களை அறிய பூசாரி பத்மநாதன் 90478 60862 எண்ணிற்கு அழைக்கலாம்.