பதிவு செய்த நாள்
18
மார்
2020
12:03
தஞ்சாவூர், கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக வருகிற மார்ச் 31ம் தேதி வரை உலக புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோவில் மூடப்பட்டது. தினமும் வழக்கம் போல் நான்கு கால பூஜைகள் நடைபெறும் என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
உலகப் புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோவில் தமிழகத்தின் முக்கியமான சுற்றுலாத்தலங்களில் ஒன்றாக திகழ்ந்து வருகிறது. தினமும் வெளிநாடு மற்றும் உள்நாட்டை சேர்ந்த ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து சென்ற வண்ணம் உள்ளனர். கடந்த பிப்ரவரி 5ம் தேதி கும்பாபிஷேகத்திற்கு பிறகு, அதிக அளவில் பக்தர்களும் சுற்றுலா பயணிகளும் பெரியகோவில் படையெடுத்து வந்தனர். இந்நிலையில் கொரோனா அச்சம் காரணமாக பல்வேறு சுற்றுலாத் தலங்களில் கூட்டம் வெறிச்சோடிய நிலையிலும், தஞ்சை பெரிய கோவிலில் மட்டும் நாளுக்கு நாள் கூட்டம் அதிகமாகி கொண்டே இருந்தது. இந்நிலையில் தமிழகத்தின் முக்கியமான சுற்றுலாத் தலங்கள் அனைத்தும் மூடப்பட்ட நிலையில், தஞ்சாவூர் பெரியகோவிலில் இன்று அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்ட வழக்கம் போல பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
இந்திய தொல்லியல்துறையின் கீழ் உள்ள தஞ்சை பெரிய கோவிலை மூட உத்தரவு வரப்பட்ட நிலையில், காலை 11 மணிக்கு கோவிலில் இருந்த பக்தர்கள் வெளியேற்றப்பட்ட, மாராட்ட கோபுரத்தின் நுழைவு வாயில் விளம்பரம் வைக்கப்பட்டது. அதை தொடர்ந்து கோவில் மூடப்பட்டது. கோவிலுக்கு வந்தவர்கள் திரும்பி அனுப்பட்டனர். மேலும் கோவிலில் நான்கு கால பூஜைகள் வழக்கம்போல் நடைபெறும் என அறநிலைய மற்றும் தொல்லியல் துறையை அறிவித்தனர். இதை போல, தாராசுரம் ஐராவதேஸ்வரர் கோவிலும் மூடப்பட்டது.