பதிவு செய்த நாள்
23
மார்
2020
03:03
"கோவில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம்" என்பது முதுமொழி. அதற்கு ஏற்ப, நம் முன்னோர்கள் ஒவ்வொரு ஊரிலும், கோவில்களை நிர்மாணிப்பதில், பயபக்தியுடன் ஈடுபட்டனர். அதன் காரணமாக, சூலூர் வட்டாரத்தில் கோவில்கள் இல்லாத ஊரே கிடையாது என்ற நிலை உள்ளது.
அந்த வகையில், அரசூர் கிராமத்தில், ஏராளமான கிராம தேவதைகள், கோவில்களில் குடி கொண்டு, மக்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர். கோவை-அவிநாசி ரோட்டில், அரசூரின் தென்பகுதியில் அமைந்துள்ளது தங்கநாயகி அம்மன் கோவில். கொங்கு வேளாளர் சமுதாயத்தின் பனங்காடை குலத்தாரின் குல தெய்வமான இக்கோவில், 1961 ஆம் ஆண்டு நிர்மாணிக்கப்பட்டது. ரோட்டை ஒட்டி அமைக்கப்பட்டுள்ள நுழைவாயில் வளைவு நம்மை முதலில் வரவேற்கிறது. கிழக்கு திசை நோக்கி அமைந்துள்ள கோவிலினுள், கருட கம்பமும், வலதுபுறம் தீர்த்தக் கிணறும் உள்ளது. முன் மண்டபத்தை கடந்து, உள்ளே செல்ல, கருவறையில் கருணையே வடிவமான, தங்கநாயகி அம்மன், சப்த கன்னிமார்களும் அருள்பாலிக்கின்றனர். விநாயகப்பெருமானும், முரருகப்பெருமானும் இரு புறங்களிலும் வீற்றிருக்க, பாமா ருக்மணி சமேதராக பெருமாளும், ராசாத்தாளும், பேச்சியம்மனும், கருப்பராய சுவாமியும் அருளாசி வழங்குகின்றனர். கன்னி மூலையில் கணபதிக்கும் தனி சன்னதி உள்ளது.
கோவில் பூஜை நிகழ்வுகள் குறித்து நிர்வாகத்தினர் கூறியதாவது: கொங்கு வேளாளர் சமுதாயத்தில் உள்ள பல்வேறு குலங்களில், பனங்காடை குலமும் ஒன்றாகும். புன்செய் நிலங்களில் பனை வளர்ப்பில் ஈடுபட்டதால், பனங்காடை என,அழைப்பது வழக்கமானது. குல தெய்வ வழிபாட்டுக்கு, முக்கியத்துவம் கொடுத்து, வழிபாடு நடத்துவது கொங்கு வேளாளரின் மரபாகும். காலை 5:00 மணிக்கு நடை திறக்கப்பட்டு, பால் அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனை நடக்கும். மதியம் 12:00 மணிக்கு உச்சி கால பூஜை நடக்கும். அமாவாசை, பௌர்ணமி மற்றும் கிருத்திகை உள்ளிட்ட விஷேச நாட்களில் அம்பாளுக்கும், முருகனுக்கும் சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜைகள் நடக்கின்றன. தொடர்ந்து, திருக்கோவிலை சுற்றி சுவாமி வலம் வந்து, பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். ஆண்டுதோறும் ஜூன், 26ம் தேதி ஆண்டு விழா விமர்சையாக நடக்கும். மேலும், சிவன் ராத்திரியன்று, நான்கு கால பூஜை மற்றும் பொங்கல் வைத்து வழிபடுவது தொன்று தொட்டு நடந்து வருகிறது. கேரளா மற்றும் தமிழ்நாட்டில் உள்ள, 100க்கும் மேற்பட்ட ஊர்களில் வாழும் பனங்காடை குலத்தவர்கள், இக்கோவிலுக்கு வந்து வழிபாடு நடத்தி, அம்மனின் அருள் பெற்று செல்கின்றனர்.