பதிவு செய்த நாள்
05
மே
2012
10:05
அழகர்கோவில்: கண்டாங்கி பட்டு உடுத்தி, கையில் வேல் கம்புடன் பக்தர்களின் கோவிந்தா கோஷம் முழங்க அழகர் மலையில் இருந்து மதுரைக்கு புறப்பட்டார் கள்ளழகர். நாளை காலை 5.45 மணிக்கு வைகையாற்றில் இறங்குகிறார். அழகர்கோயில் சுந்தரராஜ பெருமாள் கோயில் சித்திரை திருவிழா மே 2ல் துவங்கி நடக்கிறது. முதல் 2 நாட்களும் பல்லக்கில் புறப்பட்ட சுந்தரராஜ பெருமாள், திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருளினார். நேற்று காலை தோளுக்கினியாள் அலங்காரத்தில் புறப்பட்டு கோயிலை வலம் வந்தார். மாலை 5.30 மணிக்கு கண்டாங்கி பட்டு உடுத்தி, கையில் வேல் கம்புடன், மேள, தாளம் முழங்க தங்கப் பல்லக்கில் மதுரைக்கு புறப்பட்டார் கள்ளழகர். கோயில் ராஜகோபுரத்தில் உள்ள காவல் தெய்வமான 18ம் படி கருப்பண சுவாமி, சன்னதி எதிரில் உள்ள கொண்டப்ப நாயக்கர் மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு வையாழியானவுடன், கொம்பு சாத்தும் நிகழ்ச்சியும், தீப ஆராதனையும் நடந்தது. பின் கருப்பண சுவாமியிடம் அனுமதி பெற்று இரவு 7 மணிக்கு கோயிலில் இருந்து புறப்பட்டார். கூடியிருந்த பக்தர்களின் "கோவிந்தா கோஷம் முழங்க அழகரை தரிசித்தனர். இன்று காலை 6 மணிக்கு மூன்றுமாவடி வருகிறார். அங்கு எதிர் சேவை நடக்கிறது. காலை புதூரிலும், மாலை அவுட்போஸ்டிலும் எதிர்சேவை நடக்கிறது. இரவு தல்லாகுளம் பெருமாள் கோயிலில் திருமஞ்சணம் நடக்கிறது. மே 6 அதிகாலை 2 மணிக்கு ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் சூடிக் கொடுத்த மாலையை ஏற்றுக்கொண்டு, வெட்டிவேர் சப்பரத்திலும், 3 மணிக்கு தமுக்கம் எதிரில் ஆயிரம் பொன் சப்பரத்திலும் எழுந்தருளுகிறார்.
வைகை ஆற்றில் இறங்குகிறார்: நாளை காலை 5.45க்கு மேல் 6.15 மணிக்குள் அழகர் வைகை ஆற்றில் இறங்குகிறார். காலை 7.30 மணிக்கு அங்கிருந்து புறப்படும் அழகர், காலை 10 மணிக்கு ராமராயர் மண்டபம் செல்கிறார். பக்தர்கள் தண்ணீர் பீய்ச்சியும், அங்க பிரதட்சணம் செய்தும் நேர்த்திக் கடன் செலுத்துவர். மாலை 5 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு, இரவு 11 மணிக்கு வண்டியூர் வீரராகவப் பெருமாள் கோயில் சென்றடைகிறார்.
கண்கவரும் வாண வேடிக்கை: அழகர் புறப்படும் போது மேள, தாளம் இசைப்படுவதுடன், வெடிகள் வெடிப்பது வழக்கம். வெடி வைப்பவர்களுக்கும், பக்தர்களுக்கும் இதனால் பாதுகாப்பில்லை என பலர் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து இந்த ஆண்டு பல லட்சம் ரூபாய் மதிப்பில் வாண வேடிக்கைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. மாலை 6 மணி முதல் ஒரு மணி நேரம் நடந்த கண்கவரும் வாண வேடிக்கையால் பக்தர்கள், குழந்தைகள் மகிழ்ச்சி அடைந்தனர்.