பதிவு செய்த நாள்
05
மே
2012
10:05
மோகனூர்: முத்துராஜா தெரு பகவதியம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவில், சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, ஸ்வாமியை வழிபட்டனர். மோகனூர், முத்துராஜா தெருவில் பகவதியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் திருப்பணி, மிகுந்த பொருட்செலவில், கடந்த ஆண்டு துவங்கியது. திருப்பணிகள் அனைத்து முடிவடைந்த நிலையில், நேற்று கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடந்தது. விழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் அதிகாலை 4 மணிக்கு கணபதி, மகாலட்சுமி ஹோமம் நடந்தது. தொடர்ந்து, பக்தர்கள் காவிரி ஆற்றுக்குச் சென்று தீர்த்தக்குடம் எடுத்து வந்தனர். மாலை 6 மணிக்கு விநாயகர் வழிபாடு, புண்யாகம், வாஸ்து சாந்தி, முதல்கால யாகசாலை பூஜை, கோபுர கலசம் வைத்தல், கண் திறப்பு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தது.நேற்று அதிகாலை 5 மணிக்கு இரண்டாம் காலயாக பூஜை, நாடிசந்தானம், மூலமந்திர ஹோமம், கடம்புறப்பாடு நடந்தது. அதை தொடர்ந்து காலை 7.30 மணிக்கு பகவதியம்மன் மகா கும்பாபிஷேகமும், தீபாராதனை, ஸ்வாமி தரிசனம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் நடந்தது. விழாவில், சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று ஸ்வாமியை வழிபட்டனர். பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகிகள், ஊர் மக்கள் செய்திருந்தனர்.