பதிவு செய்த நாள்
05
மே
2012
10:05
கடையநல்லூர்:கடையநல்லூர் பூமிநீளா சமேத நீலமணிநாத சுவாமி கோயிலில் பிரமோற்சவ தேரோட்டம் நேற்று கோலாகலமாக நடந்தது.கடையநல்லூரில் பிரசித்தி பெற்று விளங்கும் பூமிநீளா சமேத நீலமணிநாத சுவாமி (கரியமாணிக்க பெருமாள்) கோயில் பிரமோற்சவ விழா கடந்த 25ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. அன்று இரவு சமர பூபாரம் நடந்தது. தொடர்ந்து நாள்தோறும் சிம்ம வாகனம், அனுமர் வாகனம், சேஷ வாகனம், கருட வாகனம், யானை வாகனம், குதிரை வாகனம் உள்ளிட்ட வாகனங்களில் சுவாமிகள் வீதிஉலா நடந்தது. கடந்த 1ம் தேதி திருக்கல்யாண வைபவம் நடந்தது. பிரமோற்சவ விழாவில் சிறப்பு பெற்ற தேரோட்டம் நேற்று கோலாகலமாக நடந்தது. தேரோட்டத்தை முன்னிட்டு அதிகாலை 6 மணிக்கு நீலமணிநாதர் தேருக்கு எழுந்தருளினார். ரத வீதிகளில் பக்தர்கள் "கோவிந்தா, கோவிந்தா கோஷங்களை எழுப்பிய வண்ணம் திருத்தேரோட்டம் நடந்தது. தேரோட்டத்தை முன்னிட்டு பக்தர்களுக்கு இலவசமாக மோர், குளிர்பானம் உள்ளிட்டவைகள் ஆங்காங்கே வழங்கப்பட்டன. தேரோட்டத்தில் கடையநல்லூர், நெல்லை, மதுரை, கோவை, சென்னை, பெங்களூரு மற்றும் கேரளா, கர்நாடகா, ஆந்திரா, மகாராஷ்டிரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். தேராட்டத்தை முன்னிட்டு இன்ஸ்பெக்டர்கள் ஜெயராம், சண்முகவேல், சப்-இன்ஸ்பெக்டர்கள் சிவன், முத்துலட்சுமி, அல்லிராஜா உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.