பதிவு செய்த நாள்
07
மே
2012
10:05
நகரி:திருப்பதி வெங்கடேசப் பெருமாளை தரிசிக்க, கோடை விடுமுறையில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள், திருமலைக்கு தொடர்ந்து வருவதால், விடுதிகளில் தங்கும் பக்தர்கள், 24 மணி நேரத்திற்குள் காலி செய்துவிட்டு, அடுத்து வரும் பக்தர்களுக்கு உதவ வேண்டுமென, திருமலை திருப்பதி தேவஸ்தானம் வேண்டுகோள் விடுத்துள்ளது. பள்ளி, கல்லூரிகளின் கோடை விடுமுறையை ஒட்டி, வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் அதிகளவில் பக்தர்கள், தங்களது குடும்பத்தினருடன் திருமலைக்கு வந்தவண்ணம் உள்ளனர். இதனால், திருமலை கோவிலில் சாமி தரிசன நேரம் உட்பட, தங்கும் விடுதிகள் பெறவும், முடி காணிக்கை செலுத்தவும், பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை, பக்தர்களுக்கு ஏற்படுகிறது.இதனால், குறிப்பிட்ட நேரத்தில் திருமலையில் முடிக்க வேண்டிய பணிகளை நிறைவு செய்ய முடியாமல், பக்தர்கள் அவதிக்கு உள்ளாகின்றனர். தங்கும் விடுதிகளை, 24 மணி நேரத்திற்குள் காலி செய்ய முடியவில்லை என, தேவஸ்தான அதிகாரிகளிடம் பக்தர்கள் முறையிட்டனர்.இதையடுத்து, துணை நிர்வாக அதிகாரி சீனிவாசராஜூ நேற்று முன்தினம், திருமலையில் முடி காணிக்கை செலுத்தும் இடத்திலும், பக்தர்கள் தங்கும் யாத்திரி சதன், மாதவம், 12, வைகுண்டம் வளாகங்கள் போன்ற முக்கிய இடங்களில், பக்தர்களுக்கு கிடைக்கும் வசதிகள் குறித்து கேட்டறிந்தார்.
முடி கணிக்கை 7 மணி நேரம்: இங்கு, 40 ஆயிரம் முதல், 50 ஆயிரம் பேர் வரை தினமும், முடி காணிக்கை செலுத்துகின்றனர். இங்கு, 7 மணி நேரம் வரை பக்தர்கள் காத்திருக்கின்றனர். கோடை விடுமுறையில் அதிகளவில் பக்தர்கள் வருவதால், இங்கு பணிபுரியும், 650 சவரத் தொழிலாளர்களால், குறிப்பிட்ட நேரத்திற்குள் பக்தர்களை வெளியில் அனுப்ப முடியவில்லை.நீண்ட நேரம் பக்தர்கள் காத்திருப்பதால் தொல்லை ஏற்படுகிறது. பக்தர்களை துரிதமாக அனுப்ப சவரத் தொழிலாளர்கள் கூடுதல் நேரம் பணியாற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என, அவர் தெரிவித்தார். விடுதிகளில் தங்குபவர்களும், அடுத்து வருபவர்களுக்கு வசதியாக, 24 மணி நேரம் முடிந்தவுடன் காலி செய்ய வேண்டும் எனவும், அவர் பக்தர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.திருமலை கோவிலில், சனி, ஞாயிறு ஆகிய இரு தினங்களில், ஒன்றரை லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். வைகுண்டம் கியூ காம்ப்ளக்சின் அனைத்து வளாகங்களும் நிரம்பிய நிலையில், கோவிலுக்கு வெளியே நீண்ட தூரம் வரை, இலவச தரிசன வரிசை நீண்டுள்ளது.
காத்திருப்பு நேரம்: 300 ரூபாய் சிறப்பு நுழைவு தரிசனம் மற்றும் பாதயாத்திரையாக வரும் பக்தர்கள், 5 மணி நேரமும், இலவச தரிசனத்துக்கு, 12 மணி நேரமும், பக்தர்கள் காத்திருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.