பதிவு செய்த நாள்
07
மே
2012
10:05
மதுரை:மதுரை சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான வைகையாற்றில் அழகர் இறங்கும் நிகழ்ச்சி, நேற்று கோலாகலமாக நடந்தது. பக்தர்கள் வெள்ளத்தில், விளக்குகளால் ஜொலித்த தங்கக் குதிரை வாகனத்தில், காலை 5.50 மணிக்கு பச்சை பட்டு உடுத்தி ஆற்றில் அழகர் இறங்கினார்.சித்திரைத் திருவிழா ஏப்., 23ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம், தேரோட்டத்தை தொடர்ந்து, நேற்று முன்தினம் மதுரை வந்த கள்ளழகருக்கு மூன்றுமாவடியில் எதிர்சேவை நடந்தது. இரவு 10 மணிக்கு தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி கோவிலில் எழுந்தருளினார். அங்கு திருமஞ்சனம் நடந்தது. பின், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடிக் கொடுத்த மாலை சாத்தப்பட்டு, கோவிலைச் சுற்றி வெட்டிவேர் சப்பரத்தில் உலா வந்தார்.அதிகாலை 4 மணிக்கு, தமுக்கம் கருப்பண சுவாமி கோவிலில், ஆயிரம் பொன் சப்பரத்தில் எழுந்தருளினார். பின், ஒவ்வொரு மண்டகப்படியாக எழுந்தருளினார்.காலை 5.50 மணிக்கு, "கோவிந்தா... நமோ நாராயணா... என்று பக்தர்களின் கோஷங்களுக்கு இடையே, பச்சை பட்டு உடுத்தி, தங்கக் குதிரையில் வந்த அழகர், ஆற்றில் இறங்கி, திருக்கண் மண்டபத்தைச் சுற்றி வந்தார். அழகரை வீரராகவப் பெருமாள் வரவேற்றார். அறங்காவலர் குழுத் தலைவர் வெங்கடாசலம் தலைமையிலும் வரவேற்பு அளிக்கப்பட்டது.அமைச்சர் செல்லூர் ராஜு, அறநிலையத்துறை செயலர் ராஜாராம், கலெக்டர் சகாயம், போலீஸ் கமிஷனர் சஞ்சய் மாத்தூர், மேயர் ராஜன் செல்லப்பா உட்பட பல அதிகாரிகள் பங்கேற்றனர்.காலை 6.15 மணிக்கு, அறநிலையத்துறை கமிஷனர் மண்டகப்படிக்கு சென்ற அழகர், காலை 6.45 மணிக்கு புறப்பட்டார். பின், மக்கள் வெள்ளத்தில் நீந்தி, காலை 11.30 மணிக்கு ராமராயர் மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு அழகரை குளிர்விக்க தண்ணீர் பீச்சும் நிகழ்ச்சி நடந்தது. இரவு 7 மணியளவில், அண்ணா நகர் வழியாக வண்டியூர் வீரராகவப் பெருமாள் கோவிலுக்கு புறப்பட்டார்.