பதிவு செய்த நாள்
13
ஏப்
2020
11:04
பல்லடம்: கொரோனாவை விரட்ட அனைவரும் வீட்டில் விளக்கேற்றி வழிபாடு செய்யுங்கள் என, கோவை காமாட்சிபுரி ஆதீனம் அறிவுரை வழங்கினார்.
பல்லடம் நகராட்சியின் சார்பில், கொரோனா விழிப்புணர்வு நாடக நிகழ்ச்சி, மேற்கு பல்லடம் பகுதியில் நடந்தது. எம்.எல்.ஏ., நடராஜன் தலைமை வகித்தார். நகராட்சி கமிஷனர் கணேசன் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக பங்கேற்ற கோவை காமாட்சிபுரி ஆதீனம் சிவலிங்கேஸ்வர சுவாமிகள் பேசியதாவது: கொரோனா வைரசை விரட்ட, அரசு கடும் முயற்சி மேற்கொண்டு வருகிறது. போலீஸ், மருத்துவம், நகராட்சி, ஊராட்சி நிர்வாகங்கள், அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றி வருகின்றன. இருந்தும், மக்களிடம் போதிய விழிப்புணர்வு இல்லை. ஊரடங்கு எதற்கு என்றே தெரியாமல், பொதுமக்கள் வெளியே சுற்றி வருகின்றனர். அரசு உத்தரவுக்கு ஒத்துழைப்பு அளித்து, வைரஸை விரட்ட ஆதரவு தர வேண்டியது அவசியம்.
ஊரடங்கு உத்தரவால், வரலாற்று புகழ்பெற்ற கோவில்களும் கூட மூடப்பட்டுள்ளன. கிராமப்புற கோவில்களில் வழிபாடு நடக்க, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கோவில்களில், வழிபாடுகள் அனைத்தும் தடைபட்டுள்ளதால், பொதுமக்கள், வீட்டில் விளக்கேற்றி வழிபாடு செய்ய வேண்டியது அவசியம். நோய்களை விரட்ட, நம் முன்னோர்கள் பல்வேறு வழிபாடுகளை மேற்கொண்டனர். எனவே, அவரவர் மதத்தின் மீது நம்பிக்கை கொண்டு, வீட்டில் வழிபாடு செய்யுங்கள். நிச்சயம் நல்லதொரு வழி கிடைக்கும். இவ்வாறு அவர் பேசினார். முன்னதாக, நகராட்சி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட விழிப்புணர்வு நாடகமும், அதை தொடர்ந்து, பொதுமக்களுக்கு கபசுர மூலிகை கஷாய குடிநீரும் வழங்கப்பட்டது.