ஆதீன பள்ளி மாணவர்களின் குடும்பத்திற்கு உணவுப் பொருள் வழங்கிய குருமகாசன்னிதானம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13ஏப் 2020 02:04
நாகை: மயிலாடுதுறை அருகே குருஞானசம்பந்தரால் துவக்கி வைக்கப்பட்ட தருமபுரத்தில் சைவ ஆதீனம் திருமடம் அமைந்துள்ளது. இந்தப் பழமையான ஆதினம் சைவத்தையும் தமிழையும் தத்துவங்கள் செய்வதுடன் பேரிடர் காலத்தில் மக்களுக்கு பேருதவி ஆற்றி வருகிறது. தற்போது உலக நாடுகளையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ் தாக்கம் தமிழகத்திலும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதை தடுக்க மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில் தருமபுரம் ஆதீனத்தின் சார்பில் 28 கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் தொடர்ந்து நடைபெற்று நடத்தப்பட்டு வருகின்றன.
மேலும் இந்த வைரஸ் தாக்கத்தைக் குறைக்க பல ஆயிரம் பேருக்கு கபசுரக் குடிநீர் ஆதீனத்தின் சார்பில் வழங்கப்படுகிறது. இந்நிலையில் தருமபுரம் ஆதீன தொடக்கப் பள்ளியில் பயிலும் 550 ஏழை மாணவர்களின் குடும்பங்கள் பயனடையும் வகையில் ஆதீனத்தின் சார்பில் அரிசி பருப்பு வகைகள் எண்ணெய் பிரட் பாக்கெட் பிஸ்கட் முகக் கவசம் உள்ளிட்ட 16 வகையான பொருட்களை இன்று திருமணத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தருமபுரம் ஆதீனம் 27 ஆவது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் மாணவர்களின் குடும்பங்களுக்கு வழங்கினார். இதில் சுசீந்திரன் அறக்கட்டளை நிர்வாகிகள் மயிலாடுதுறை தாசில்தார் முருகானந்தம் நகராட்சி ஆணையர் அண்ணாமலை கல்வி நிறுவனங்களின் செயலாளர் செல்வநாயகம் கல்லூரி முதல்வர் செந்தில்குமார் பள்ளி தலைமை ஆசிரியர் வெங்கடேசன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மாணவ மாணவிகளின் பெற்றோர் அரசு அறிவுறுத்தியுள்ள சமூக இடைவெளி விட்டு குருமகாசந்நிதானம் உணவு பொருட்களை பெற்றுச் சென்றனர். தருமபுரம் ஆதீனத்தின் இடைவிடாத இறைபணி மற்றும் அறப்பணிகளை பொது மக்கள் மனதார பாராட்டி சென்றனர்.