சபரிமலையில் விஷூகனி பூஜை: பக்தர்களுக்கு அனுமதி கிடையாது
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14ஏப் 2020 09:04
சபரிமலை : சித்திரை மாத பூஜை மற்றும் விஷூ கனி பூஜைகளுக்காக சபரிமலை நடை நேற்று மாலை திறக்கப்பட்டது. பக்தர்களுக்கு அனுமதி கிடையாது. கொரோனா அச்சுறுத்தலால் பங்குனி ஆராட்டு திருவிழா ரத்து செய்யப்பட்டது. சித்திரை மாத பூஜையை பக்தர்கள் இல்லாமல் நடத்த முடிவு செய்யப்பட்டது.
இதை தொடர்ந்து நேற்று மாலை 5:00 மணிக்கு மேல்சாந்தி சுதிர் நம்பூதிரி நடை திறந்தார். தொடர்ந்து விசேஷ பூஜைகள் எதுவும் இல்லை. இரவு 7:30 மணிக்கு நடை அடைக்கப்பட்டது. இன்று அதிகாலை 5:00 மணிக்கு நடை திறந்ததும் விஷூகனி பூஜை, அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து கணபதி ஹோமம் நடைபெறும். ஏப்.18 வரை தினமும் உஷபூஜை, உச்சபூஜை, அத்தாழ பூஜை மட்டும் நடைபெறும். நெய்யபிஷேகம், அஷ்டாபிஷேகம், களபாபிஷேகம், உதயாஸ்தமன பூஜை, படிபூஜை, சகஸ்ரகலசம், புஷ்பாபிஷேகம் போன்ற சிறப்பு பூஜைகள் எதுவும் நடைபெறாது.குறைவான ஊழியர்கள் மட்டும் வருவார்கள். பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதால் பூஜைகளுக்காக நடை திறந்திருக்கும் நேரமும் குறைக்கப்பட்டுள்ளது. இதன் படி காலை 5:00 மணிக்கு திறக்கும் நடை, பகல் 1:00 மணிக்கு பதிலாக காலை 10:00 மணிக்கும், மாலை 5:00 மணிக்கு திறக்கும் நடை இரவு 10:00 மணிக்கு பதிலாக இரவு 7:30 மணிக்கும் அடைக்கப்படும். இதன்படி ஏப்.18 இரவு 7:30 மணிக்கு பூஜைகள் நிறைவு பெற்று நடை அடைக்கப்படும்.