பதிவு செய்த நாள்
08
மே
2012
10:05
மதுரை: மதுரை வைகையாறு தேனூர் மண்டபத்தில், மண்டூக முனிவருக்கு சாபவிமோசனம் கொடுத்து புறப்பட்ட அழகரை, சீர்பாதங்கள் (சுவாமியை தூக்கிச் செல்பவர்கள்) அவசரப்பட்டு தூக்கியதில் கவிழும் நிலை ஏற்பட்டது. கடந்தாண்டை போல் இந்தாண்டும் நடந்த சம்பவத்தால் பக்தர்கள் அதிர்ச்சியுற்றனர். பக்தர்களுக்கும், சீர்பாதங்களுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. நேற்று முன் தினம் வைகையாற்றில் தங்ககுதிரை வாகனத்தில் இறங்கிய அழகர், இரவு வண்டியூர் வீரராகவப் பெருமாள் கோயிலுக்கு சென்றார். நேற்று காலை சேஷ வாகனத்தில் வைகையாற்றின் தேனூர் மண்டபத்தில் எழுந்தருளினார். பின், மண்டூக முனிவருக்கு சாபவிமோசனம் கொடுத்துவிட்டு, கருடவாகனத்தில் அழகர் புறப்பட தயாரானார். பல்லக்கில் அம்பி பட்டர் நின்றுக்கொண்டிருக்க, சீர்பாதங்கள் அவசரப்பட்டு ஒருபுறம் தூக்க, கருடவாகனத்துடன் அழகரும், பட்டரும் கவிழும் நிலை ஏற்பட்டது. சுதாரித்த சீர்பாதங்கள், மறுபுறம் தூக்குவதை நிறுத்த, கவிழ்வது தடுக்கப்பட்டது. பட்டருக்கோ, வாகனத்திற்கோ பாதிப்பு ஏற்படவில்லை. கடந்தாண்டு, இதேபோல் அவசரப்பட்டு தூக்க, அழகரும், பட்டரும் கவிழ்ந்தது குறிப்பிட்டதக்கது. நேற்று நடந்த இந்நிகழ்வால் பக்தர்கள் அதிர்ச்சியுற்றனர். தேனூர் மண்டபத்தைச் சேர்ந்த ஒருவர், சீர்பாதங்களை தாக்க, அவர்கள் கோபித்துக் கொண்டு மண்டபத்திலிருந்து வெளியேறினர். இதனால், "நாங்கள் அழகரை தூக்கிச் செல்கிறோம் என ஆவேசத்துடன் பக்தர்கள் கூறினர். அவர்களை கோயில் ஊழியர்களும், போலீசாரும் தடுத்தனர். பின், சீர்பாதங்களை சமரசம் செய்து, மண்டபத்திற்குள் அழைத்து வந்தபோது, அவர்களுக்கும், பக்தர்களுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. போலீஸ் சமரசம் செய்ததை தொடர்ந்து, அம்பி பட்டர், 1,2,3 என்றுக்கூற, ஒரே நேரத்தில் இருபுறமும், கருடவாகனத்தில் அழகரை சீர்பாதங்கள் தூக்கிச் சென்றனர்.