புதுச்சேரி: ரமலான் நோன்பு கஞ்சி வினியோகம், இப்தார் தொடர்பான எல்லா நடவடிக்கைகளையும் பள்ளிவாசல்களில் மேற்கொள்வது தவிர்க்கப்பட வேண்டும் என மாநில வக்பு வாரிய சார்பு செயலர் சச்சிதானந்தம் அறிவுறுத்தியுள்ளார்.அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:மத்திய அரசின் வக்பு மற்றும் சிறுபான்மை துறை அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி, வக்பு வாரிய தலைவர்களுடன் காணொளி காட்சி மூலம், தற்போது பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்றினை தடுக்கும் விதம் குறித்து ஆலோசனை நடத்தினார். அதனடிப்படையில் கீழ்கண்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. எதிர்வரும் புனித ரமலான் காலங்களில் நோன்பு கஞ்சி வினியோகம், இப்தார், தராவீஹ், சஹர் மற்றும் அதுதொடர்பான எல்லா நடவடிக்கைகளையும் பள்ளிவாசல்களில் மேற்கொள்வது தவிர்க்கப்பட வேண்டும். சமூக இடைவெளியை அனைவரும் கடைபிடிக்க வேண்டும். அனைத்து மத வழிபாடுகளையும் அனைவரும் தங்கள் வீடுகளில் இருந்த படியே நிறைவேற்றிக் கொள்ள வேண்டும். திருவிழாக்கள், மதரீதியான விழாக்கள் மற்றும் சமூக விழாக்கள் தவிர்க்கப்பட வேண்டும்.