புதையுண்டு கிடந்த பழமையான சிவன் கோவில் கண்டுபிடிப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
22ஏப் 2020 09:04
தியாகதுருகம்: வடதொரசலூர் கிராமத்தில் மண்ணில் புதையுண்டு கிடந்த நூற்றாண்டுகள் பழமையான சிவன் கோயிலின் கட்டுமானம் மற்றும் சிலைகள் கண்டுபிடிக்கப்பட்டது அப்பகுதி பக்தர்கள் பரவசம் படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அடுத்த வடதொரசலூர் கிராமத்தின் பெரிய ஏரி கரையை ஒட்டி எல்லை பிடாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இதனருகே வேப்பமரத்தின் அடியில் சிவலிங்கத்தின் தலைப் பகுதியான குழவி மட்டும் வெளியில் தெரிந்த படி இருந்தது. இதனை அப்பகுதி பக்தர்கள் பல ஆண்டுகளாக வழிபட்டு வந்தனர். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் எல்லை பிடாரி அம்மன் கோவில் முன்புறம் பொக்லைன் எந்திரம் மூலம் சுத்தப்படுத்தும் பணி நடந்தது. அப்போது மண்ணில் புதைந்து கிடந்த 3 அடி உயரமுள்ள அம்மன் சிலை, 5 அடி உயரமுள்ள 2 பெருமாள் சிலை, 3 அடி உயரமுள்ள 2 பைரவர் சிலை, 2 அடி உயரமுள்ள சண்டிகேஸ்வரர் சிலை மற்றும் உடைந்த நிலையில் நந்தி சிலை வெளிப்பட்டது. மேலும் தோண்டியபோது கோவிலில் அஸ்திவாரக் கல் கட்டடம் இருந்து. இதையடுத்து குழவி போன்ற கல்லை சுற்றி ஆழமாக தோண்டினர்.
அதிலிருந்து ஐந்தடி உயர சிவலிங்கம் வெளிப்பட்டது. பரவசமடைந்த பக்தர்கள் மண்ணில் இருந்து கிடைத்த 8 சாமி சிலைகளுக்கு அபிஷேகம் செய்து மாலை அணிவித்து வழிபாடு நடத்தினர். கொரோனா நோய் தொற்றைத் தடுக்க ஊரடங்கு அமலில் உள்ளதால் கூட்டமாக சென்று பார்க்க யாரையும் அனுமதிக்கவில்லை. ஊரடங்கு முடிந்ததும் அப்பகுதியில் வேறு ஏதேனும் சிலைகள் உள்ளனவா என்று தோண்டிப் பார்க்க முடிவு செய்துள்ளனர். இதுகுறித்து அவரைச் சேர்ந்த பாவாடை என்பவர் கூறியதாவது: பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு இங்கிருந்த சிவன் கோவில் அந்நியப் படையெடுப்பு அல்லது வேறு ஏதோ காரணங்களால் சேதமடைந்து இருக்கலாம். இப்போதைக்கு சாமி கற்சிலைகள் மட்டுமே கிடைத்துள்ளது. இங்க இருந்து வடக்கு நோக்கி ஒரு சுரங்கப்பாதை இருக்க வாய்ப்புள்ளது. இக்கோயிலின் உற்சவர் ஐம்பொன் சிலைகளும் மண்ணில் புதைந்திருக்கலாம். இதன் அருகே அரசமரத்து விநாயகர் மற்றும் குளம் ஆகியவை இக்கோயிலுக்கு சொந்தமானதாகும். இப்பகுதியை முழுமையாக தோண்டி ஆய்வு செய்தால் மேலும் பல சாமி சிலைகள் கிடைக்கும். அதேபோல் கோவில் அஸ்திவார கட்டுமானத்தில் கல்வெட்டுகள் கிடைக்க வாய்ப்புள்ளது. ஒருவேளை கல்வெட்டு கிடைத்தால் இக்கோயிலின் தல வரலாற்றை அறிந்து கொள்ள முடியும். என்று பாவாடை கூறினார். சேதமடைந்து மண்ணில் புதைந்த சிவன் கோயிலை புதிதாக கட்ட அப்பகுதி மக்கள் முடிவு செய்துள்ளனர். மண்ணுக்கு அடியில் இருந்து சுவாமி சிலைகள் கிடைத்திருப்பது சுற்றுவட்டார கிராம மக்களுக்கு செய்தி பரவியுள்ளது. ஊரடங்கு அமலில் உள்ளதால் நேரில் சென்று பார்க்க முடியாத நிலை உள்ளதால் அப்பகுதியில் மக்கள் நடமாட்டத்தை காண முடியவில்லை.