காரியாபட்டி: கிரகங்களின் அடிப்படையில் பூமி சுற்றுவது போல், மனிதனுக்கும் கிரக நிலைகளின் அடிப்படையில்தான் ராசிபலன், வாழ்க்கை முறை அமைகிறது. எல்லோருக்கும் எல்லாமே கிடைத்து விடாது. சாதாரண மனிதன் உயர்ந்த நிலையை அடைவதும், உயர்ந்த நிலையில் இருந்து தாழ்வு நிலைக்கு வருவதும் அவரவர் ராசிபலன் அடிப்படையில் நடக்கிறது. ராசிபலனால் ஒரு மனிதனுக்கு ஏற்படக்கூடிய சஞ்சலங்களை பரிகாரங்கள் மூலம் ஓரளவிற்கு தீர்க்க முடியும் என்கிற நம்பிக்கை பலருக்கு உண்டு.
பரிகார ஸ்தலங்களாக பல்வேறு இடங்கள் நிர்ணயிக்கப்பட்டு வழிபாடு செய்யப்பட்டு வருவது அனைவருக்கும் தெரிந்ததே. அதேபோல காந்த அதிர்வலைகள் மூலம் சில நல்ல காரியங்களை சாதிக்க முடியும் என வானசாஸ்திரங்கள் தெரிவிக்கின்றன. உலக மக்களை கொடும் துயரத்திற்கு ஆளாக்கி வரும் கொரோனா வைரஸ் தொற்று பரவுவதிலிருந்து மக்களை காக்க வேண்டும் என்ற நல்ல நோக்கத்தில், டெலிதெரபி மின்னதிர்வு மூலம் பிரார்த்தனையில் ஈடுபட்டு வருகிறார் காரியாபட்டி கல்குறிச்சியைச் சேர்ந்த சுந்தரகணபதி ஐயர்.
அவர் கூறியதாவது: நமக்கு வேண்டியவர்களின் நட்பை பெற அவரது முழு உருவத்தை மனதால் நினைத்து, துண்டு பேப்பரில், அவரது பெயரை எழுதி, டெலிதெரபி மின்னதிர்வு பெட்டியில் ஒட்டி குறிப்பிட்ட நாட்கள் மின்னதிர்வுகளை ஏற்படுத்தி பிரார்த்தனை செய்தால் அந்த நட்பு எளிதில் கிடைக்கும். அதுபோல் கொரோனா வைரஸ் ஒழிந்து, நாட்டு மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப துண்டு பேப்பரில் எழுதி, 15 நாட்களாக டெலிதெரபி மின்னதிர்வு பிரார்த்தனை செய்து வருகிறேன். மின்னதிர்வலைகள் சென்றடைய வேண்டிய தூரத்தைப் பொறுத்து நாட்கள் கணிக்கப்படுகிறது. விரைவில் அதற்கான தூரத்தை எட்டிவிடும். வைரஸ் முற்றிலும் ஒழிந்து மக்கள் பூரண குணமடைவார்கள், என்றார்.