பதிவு செய்த நாள்
02
மே
2020
12:05
தஞ்சாவூர், தஞ்சாவூர் பெரியகோவில் சித்திரை திருவிழா தேரோட்டம் இன்று நடைபெறவிருந்த நிலையில், கொரோனா எதிரொலியாக திருவிழா ரத்து செய்யப்பட்டதால், தேர் காட்சி பொருளாக நிற்கிறது.
உலக புகழ்பெற்ற தஞ்சாவூர் பெரியகோவில், ஆண்டு தோறும் சித்தரை திருவிழா வெகுவிமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி இந்தாண்டு திருவிழா, கடந்த 18ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி, மே 5ம் தேதி வரை நடைபெறுவதாக இருந்தன. திருவிழாவில் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று(2ம் தேதி) நடைபெற இருந்த நிலையில், கொரோனா எதிரொலியாக, திருவிழா ரத்து செய்யப்பட்டதால், தேர் நிற்கும் இடத்தில், காட்சி பொருளாக நிற்கிறது. இது குறித்து பொதுமக்கள் கூறியதாவது; 100 ஆண்டுகளுக்கு முன்பு வரை இத்தேரோட்டம் விமரிசையாக நடத்தப்பட்டு வந்த நிலையில், தேர் பழுதடைந்ததன் காரணமாக நின்று போனது. பின்னர் 2013ம் ஆண்டு நிதி ஒதுக்கீடு செய்ததைத் தொடர்ந்து, புதிய தேர் உருவாக்கப்பட்டது. இதையடுத்து, மீண்டும் சித்திரைத் தேரோட்டம் 2015-ம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. ஆண்டுதோறும் நடைபெறும் இத்தேரோட்ட விழாவில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்வார்கள். எனவே, இத்திருவிழா தஞ்சாவூரின் முதன்மைத் திருவிழாக்களில் ஒன்றாக மாறிவிட்டது. ஆனால் இந்தாண்டு திருவிழா ரத்து செய்யப்பட்டு, தேரோட்டம் இல்லாமல் தேர் நிறப்பதை பார்ப்பது மனதிற்கு வேதனையாக உள்ளது என்றனர்.