பதிவு செய்த நாள்
11
மே
2020
12:05
உடுமலை;கொரோனா ஊரடங்கு காரணமாக, கோடை சீசனிலும், மக்கள் நடமாட்டம் இல்லாததால், மாசு குறைந்து, பஞ்சலிங்க அருவியும், வழியோர வனப்பகுதியும் ரம்மியமான சூழலுக்கு மாறி காட்சியளிக்கிறது. உடுமலை அருகே திருமூர்த்திமலை அடிவாரத்தில் இருந்து, 960 மீ., உயரத்தில், வனப்பகுதியில், பஞ்சலிங்க அருவி அமைந்துள்ளது. மலைத்தொடரில், உருவாகும் தோனியாறு, கொட்டையாறு உட்பட சிற்றாறுகள், பஞ்சலிங்கங்கள் அமைந்துள்ள பகுதியில், ஒருங்கிணைந்து அருவியாய் கொட்டுகிறது.
கோடை காலத்திலும் சீரான நீர் வரத்து, மூலிகைகளை உள்ளடக்கிய சுவை மிகுந்த நீர், பாலாற்றின் கரையில், சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகியோர் ஒருங்கே எழுந்தருளியுள்ள அமணலிங்கேஸ்வரர் கோவில், என ஆன்மிகம், சுற்றுலாத்தலமாக உள்ளது.இதனால், திருமூர்த்திமலைக்கு ஆண்டு முழுவதும் சுற்றுலா பயணிகள் வருகை இருக்கும். அதிலும், கோடை காலத்தில், பல லட்சம் சுற்றுலா பயணிகள் வந்து செல்வர். அருவியில் குளிக்கச்செல்லும் சுற்றுலா பயணிகள் பிளாஸ்டிக் பொருட்களை கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தாலும், மாசு படுத்துதல், அருவி, பாலாற்றில் பயன்படுத்திய துணிகளை வீசுதல், பிளாஸ்டிக் கழிவுகள் என மாசு படுத்தப்படும். அருவிக்கு செல்லும் வனப்பகுதி வழித்தடத்திலும், அதிகளவு கழிவுகள் வீசப்படும். இந்நிலையில், கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக, மூன்று மாதமாக பஞ்சலிங்க அருவிக்கு செல்ல தடைவிதிக்கப்பட்டது. ஊரடங்கு காரணமாக, திருமூர்த்திமலை பகுதிக்கு யாரும் வருவதில்லை. இதனால், அருவி பகுதியில், மாசு ஏற்படுவது வெகுவாக குறைந்துள்ளது. இந்நிலையில், மேற்குத்தொடர்ச்சி மலையில், சமீபத்தில் பெய்த மழையால், பஞ்சலிங்க அருவிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. எவ்வித கழிவுகளும் கொட்டப்படாமல், அருவி பகுதியும், வழித்தடமும் மாசடைவது தவிர்க்கப்பட்டு, இயல்பான வனப்பகுதி போன்ற தோற்றத்துக்கு மாறியுள்ளது. பருவமழை சீசன் துவங்கினால், நீர் வரத்து மேலும் அதிகரித்து, பஞ்சலிங்க அருவி மேலும், புதுப்பொலிவுடன், காட்சியளிக்கும் வாய்ப்புள்ளது.