நபிகள் நாயகம் மெக்கா நகரில் மக்களுக்கு போதனை செய்து வந்தார். மக்கள் அதை பின்பற்ற ஆர்வமாயிருந்தனர். இதைப் பொறுக்காத எதிரிகள் சிலர், நாயகத்தைக் கொல்ல முடிவு செய்தனர். ஒருநாள் இரவு அவரது வீட்டருகில் காத்திருந்தனர். அவர் வெளியில் வரும் போது கொல்வது அவர்களின் திட்டம். இந்த தகவலை கேள்விப்பட்ட நாயகம், எதிரிகளின் கண்ணில் படாமல், நண்பரான அபூபக்கர் என்பவருடன் ‘தவுர்’ என்னும் மலைக்குகைக்கு சென்றார். அது மிக பாதுகாப்பான இடம். அங்கே இருந்தால் எதிரிகளால் கண்டுபிடிக்க முடியாது என நினைத்தார்.
விடாப்பிடியாக தேடிய எதிரிகள் தவுர் குகையை நோக்கி வந்தனர். அப்போது, ‘‘நாம் கொல்லப்படுவது உறுதி’’ என்றார் அபூபக்கர். ‘‘இங்கே நாம் இருவர் மட்டுமில்லை, மூன்றாவதாக ஒருவர் இருக்கிறார்” என்றார் நாயகம். ஆச்சரியமடைந்த அபூபக்கர்,“ யார்?” என கேட்க,“ எல்லாம் வல்ல இறைவன். எனவே நாம் அச்சப்பட தேவையில்லை” என்றார். எதிரிகள் குகையை அடைவதற்குள் சிலந்தி ஒன்று நுழையுமிடத்தில் வலை பின்னியது. அதை பார்த்த ஒருவன்,“நாயகம் இங்கிருந்தால், சிலந்தி வலை அறுபட்டிருக்க வேண்டும். எனவே இங்கிருக்க வாய்ப்பில்லை” எனத் தெரிவித்தான். உடனே, அவர்கள் அனைவரும் வந்த வழியே திரும்பினர்.
இப்தார்: மாலை 6:27 மணி நாளை சஹர் முடிவு: அதிகாலை 4:27 மணி