ஒரு ஊரிலே கோடீஸ்வரன் ஒருவன் இருந்தான். தன்னிடம் பத்து கோடி ரூபாய் இருப்பதை தெரிவிக்க மாடியின் மீது பத்து கொடிகளை நாட்டி வைத்தான். இன்னும் சம்பாதிக்கும் ஆசையுடன் மேலும் பணத்தைத் தேடினான். ஒரு நாள் அவனைச் சந்திக்க தேவ ஊழியர் ஒருவர் சென்றார். காணிக்கை கேட்டே தன்னிடம் வந்திருக்க வேண்டும் என கோடீஸ்வரன் நினைத்தான். ஆனால் ஊழியரோ குண்டூசி ஒன்றைக் கொடுத்து, ‘‘ஐயா! இது தங்களிடம் பத்திரமாக இருக்கட்டும்! பரலோகம் வரும்போது வாங்கிக் கொள்கிறேன்’’ என்று சொல்லி புறப்பட்டார். இதன் பொருள் புரியாமல் கோடீஸ்வரன் திகைத்தபோது அவரது மனைவி விளக்கம் அளித்தாள். ‘‘நீங்கள் எத்தனை கோடி பணம் சம்பாதித்தாலும் பூமியிலுள்ள பொருள் அனைத்தையும் விட்டுத் தான் செல்ல வேண்டும். குண்டூசியும் கூட வராது என்பதை உணர்த்தவே ஊழியர் இப்படிச் செய்திருக்கிறார் என்றாள். அப்படியானால் சம்பாதிப்பது தவறா என்ற சந்தேகம் எழலாம். ஒன்றும் தவறு அல்ல... ஆனால் சம்பாதிப்பதோடு, ஆண்டவரைப் பற்றியும் வாழ்வில் மனிதன் சிந்திக்க வேண்டும். உலகைப் பற்றிய அக்கறை தேவை. ஆனால் அதைப் பற்றிய கவலை நமக்குத் தேவையில்லை. . வாழ்நாள் முழுவதும் போரில் ஈடுபட்டு பல நாடுகளைக் கைப்பற்றிய பேரரசர் அலெக்சாண்டர், சாகும் போது ஒன்றையும் தான் கொ்ண வில்லை என்பதை உணர்த்திட கைகள் இரண்டையும் விரித்தநிலையில் சவப்பெட்டியில் என்னைக் கொண்டு செல்லுங்கள் என சாகும் முன்னர் தெரிவித்தார்.