சிவன் கோயிலுக்கு அறங்காவலராக தேர்வு செய்யப்பட்டார் கிராமத்து பக்தர் ஒருவர். அதை தனக்குக் கிடைத்த பாக்கியமாகக் கருதி பணியாற்றினார். நாளடைவில் அது பாக்கியம் தானா என்பதில் சந்தேகம் உருவானது. காரணம் அடுத்தடுத்து உடம்பில் ஏதாவது சின்னச் சின்ன ரத்தக் காயங்கள் ஏற்பட்டு வந்தன. கத்திரிக்கோலால் வெட்டும் போது கையில் அது குத்தி விடும். நகம் வெட்டும் போது தோல் கிழிந்து ரத்தம் வரும். சவரம் செய்யும் போது முகத்தில் காயம் படும். சமையலில் மனைவிக்கு உதவியாக காய்கறி நறுக்கினால் அரிவாள்மனையில் விரல் பட்டு ரத்தம் வரும். கதவிடுக்கில் தவறுதலாக விரல் மாட்டிவிடும். இப்படி எத்தனையோ வாழ்வில் நடந்தன. ‘நீ அறங்காவலரான பிறகே உன் வாழ்வில் இப்படி நேர்கிறது’ என நண்பர்கள் சிலர் மனதைக் கலைத்தனர். ‘முன்பெல்லாம் இப்படி நடந்ததில்லையே...’ என பக்தரும் மனதிற்குள் புழுங்கத் தொடங்கினார். இது பற்றி கேட்க காஞ்சி மகாசுவாமிகளைத் தரிசிக்க வந்தார். பிரசாதம் பெற்ற போது சந்தேகத்தைக் கேட்டார். சிரித்தபடியே பதிலளித்தார் மகாசுவாமிகள். ‘‘ முற்பிறவியில் செய்த புண்ணியத்தால் கோயில் கைங்கரியம் செய்யும் பாக்கியம் உனக்கு கிடைச்சிருக்கு. நேர்மையுடன் செயல்பட்டு புண்ணியம் சம்பாதிக்க கிடைத்திருக்கும் வாய்ப்பு இது/ நண்பர்கள் என்ற பெயரில் பலர் உன்னைக் குழப்பியுள்ளனர். அதை பொருட்படுத்தாதே. இந்த மாதிரி விஷயங்கள் எல்லோருக்கும் நடப்பதுதான். இதற்கு முன்னர் உனக்கும் கூட ஏற்பட்டிருக்கும். சந்தேகத்தால் இப்போது அதை கவனிக்கத் தொடங்கி விட்டாய். சிவன் கோயிலுக்கு தொண்டு செய்வதால் தான் ரத்தக் காயங்கள் சின்னதாக ஏற்படுகின்றன. ஒருவேளை இதை விட்டுவிட்டால் உன் நிலை என்னாகும் என்பதை சிந்தித்துப் பார். கடவுளுக்கு சேவை செய்தால் நன்மை ஏற்படுமே தவிர ஒருநாளும் கெடுதல் நேராது. இனி காயம் ஏற்படக் கூடாது என சிவனிடம் வேண்டிக்கொள். இன்று முதல் சந்தேகத்தை கைவிட்டு கோயில் பணிகளை அக்கறையுடன் செய். எல்லாம் உன் நன்மைக்கே’’ என்றார். நிம்மதியுடன் புறப்பட்டார் பக்தர்.