தன் பட்டாளத்திலிருந்து ஒரு வீரன் தப்பி ஓடிவிட்டான் என்று கேள்விப்பட்டதும் இங்கிலாந்தின் இளவரசர் வெலிங்கடனுக்கு கோபம் வந்தது. அந்த வீரனுக்கு மரண தண்டனை விதித்தார். ‘‘உனக்கு எத்தனையோ நன்மைகளைச் செய்தேன். உன்னுடைய குடும்பத்தினர் நலமாக வாழ பணத்தை வாரிக் கொடுத்தேன். பிறந்த நாட்டிற்காக பாடுபடுவாய் என நம்பினேன். ஆனால் நீயோ எதையும் பொருட்படுத்தவில்லை. முடிவில் நீயோ பட்டாளத்தை விட்டே ஓடத் துணிந்தாய்’’ என்றார் இளவரசர். அதைக்கேட்ட வீரன் கதறி அழுதான். தவறுக்காக மன்னிப்பும் கேட்டேன். அப்போது தளபதி, ‘‘எல்லாவிதத்திலும் வீரனுக்கு இதுவரை நன்மையே செய்தீர்கள். எவ்வளவு செய்தும் அவனுக்கு மன்னிப்பு என்னும் மாபெரும் இரக்கத்தை தரவில்லையே? எல்லாவற்றையும் விட, மன்னிப்பே மகத்தானது’’ என்றார். தளபதியின் வேண்டுதல் இளவரசரின் உள்ளத்தை உடைத்தது. ‘‘இதோ... அந்த வீரனை மன்னிக்கவும் செய்கிறேன்’’ என விடுவிக்க உத்தரவிட்டார். மரண தண்டனையிலிருந்து தப்பித்த வீரன் ஆயிரம் மடங்கு அதிகமாக நாட்டை நேசிக்கத் தொடங்கினான்.