பதிவு செய்த நாள்
14
மே
2020
11:05
புதுச்சேரி: சமூக இடைவெளியை கடைபிடித்து பக்தர்கள் வருகையோடு கோவில்களை திறக்க ஆவன செய்ய வேண்டும் என, புதுச்சேரி ஓரியண்டல் இன்சூரன்ஸ் கம்பெனி வளர்ச்சி அதிகாரி பாஸ்கரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து, அவர், முதல்வர் நாராயணசாமியிடம் அளித்துள்ள மனு:கொரோனாவுக்கு எதிராக களத்தில் இறங்கி, மக்களை காத்து வரும் முதல்வர், அமைச்சர்களின் பணி போற்றத்தக்கது.தங்களால் திருப்பணிகள், கும்பாபிஷேகம் நடத்தப்பட்ட கோவில்கள் ஏராளம். அக் கோவில்கள், தற்போது, பக்தர்கள் வருகையின்றி வெறிச்சோடியுள்ளன. இச்சூழலில் போதிய வருமானம் இன்றி தவிக்கும் கோவில் அர்ச்சகர்கள், குருக்கள், பூசாரிகள், ஓதுவார்கள், மணியக்காரர், மடப்பள்ளி ஊழியர்கள், அனைத்து பிரிவு கோவில் சிப்பந்திகளுக்கு ஒரு மாத ஊதியத்தை சேர்த்து தர வேண்டும்.ஒன்றரை மாதத்திற்கும் மேலாக அமலில் இருந்த ஊரடங்கு சற்றே தளர்ந்த நிலையில், தாங்கள் முயற்சி எடுத்து சில நிபந்தனைகளுடன் சமூக இடைவெளியை கடைபிடித்து, பக்தர்கள் வருகையோடு கோவில்களை திறக்க ஆவன செய்ய வேண்டும். ஊரடங்கு சூழலில் மன இறுக்கத்தோடு வாழும் மக்களுக்கு, சற்றே விதிமுறைகளை தளர்த்தி, குறிப்பிட்ட நேரத்தை வரையறுத்து பக்தர்கள் கோவிலுக்கு செல்ல அனுமதி அளிக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.