பாண்டவர் சூதாட்டத்தில் நாட்டை இழந்து திரவுபதியுடன் காட்டில் வாழ்ந்தனர். ஒருநாள் அவர்களுக்குள் கண்ணன் பற்றிய பேச்சு வந்தது. தன்னை நம்பியவரைக் காக்க ஓடி வருவான் கண்ணன். தீமைகளை கண்டு பொறுக்க மாட்டான். எல்லாம் வல்லவன் கண்ணன் என்றெல்லாம் புகழ்ந்தனர். அப்போது, ‘‘எல்லோருக்கும் உதவிக்கரம் நீட்டும் கண்ணன், சூதாட்டத்தில் தோற்ற போது நமக்கு மட்டும் உதவ வர வில்லையே?’’ என்ற சந்தேகத்தை தெரிவித்தான் பீமன். பாண்டவர்களில் ஞானியான சகாதேவன், கண்ணனின் இயல்பை முழுமையாக உணர்ந்தவன். பீமனுக்கு விளக்கம் தர அவன் முன்வந்தான். ‘‘துரியோதனன் சார்பாகச் சகுனி சூதாட வந்தார். அதுபோல் நம் சார்பாக கண்ணனை அழைத்திருக்க வேண்டும். ஆனால் அதை இழிவாக கருதிவிட்டோம். நம் ஐவருக்கும் ஆயுதம் ஏந்தி நடத்தும் மோதுபோர் தெரியும். ஆனால் சூதுபோர் தெரியாது என உலகம் ஏளனம் செய்யுமே என போலி கவுரவம் பார்த்ததால் இந்நிலை ஏற்பட்டது’’ என்றான். ‘‘திரவுபதி அவமானப்பட்ட போது கவுரவம் சிறிதும் பார்க்கவில்லை. ஆடை இழந்த நிலையில் கூட, கைகளைத் துாக்கி, ‘கோவிந்தா! கோவிந்தா!’ என அபயக்குரலெடுத்து கதறினாள். கண்ணன் காப்பாற்ற வருவான் என நம்பி சரணடைந்தாள். அவளைக் காப்பது கண்ணனின் பொறுப்பாகி விட்டதால் திரவுபதியைக் காக்க ஓடோடி வந்தான்’’ என்றான் சகாதேவன். இதன் பின்னரே பாண்டவர்கள் தவறுகளை உணர்ந்து அமைதி அடைந்தனர்.