போரில் தன் தந்தை துரோணாச்சாரியாரைக் கொன்ற பாண்டவர் மீது அஸ்வத்தாமன் கோபமடைந்தான். அதற்காக பாண்டவரை அழிக்க பயங்கர ஆயுதமான ‘நாராயண அஸ்திரத்தை’ ஏவினான். இதற்கு மாற்று ஆயுதம் ஏதும் கிடையாது. யாருடைய கைகளில் ஆயுதம் உள்ளதோ, யாரெல்லாம் போர் புரிய முயற்சிக்கிறார்களோ அவர்களின் மீது இந்த அஸ்திரம் அக்னி மழை பொழிந்து அழிக்கும். இந்நிலையில் கண்ணன் பாண்டவர்களிடம் ஆயுதங்களை கீழே வைத்து விட்டு அமைதியாக நிற்கும்படி கட்டளையிட்டார். மனதில் போர் செய்வதற்கான எண்ணம் இருந்தால் கூட இந்த அஸ்திரம் அழிக்கும் என்றார். இப்படியாக பாண்டவர்களின் படையினர் முழுவதும் அமைதியாக இருக்க, நாராயண அஸ்திரம் தன் நேரம் முடிந்தவுடன் அமைதியாகி புறப்பட்டது.