பரமக்குடி: பரமக்குடி அருகே உள்ள நயினார் கோவில் நாகநாதசுவாமி கோயில் அடைக்கப்பட்டதால் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்த முடியாமல் வேதனையில் உள்ளனர். மேலும் வைகாசி வசந்த விழா நடைபெறுமா என்ற ஏக்கத்தில் உள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள நயினார் கோவில், மூர்த்தி, தீர்த்தம், தலம் என்ற சிறப்பு வாய்ந்தது ஆகும். இங்கு வருடம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், உள்ளூர் மக்கள் என நேர்த்திக்கடன் செலுத்த வருகை தருவார். முக்கியமாக குழந்தைப் பேறு வேண்டுவோர் இக்கோயிலில் குழந்தையை நேர்த்திகடனாக செலுத்தி மீண்டும் பெறுவது சிறப்பு வாய்ந்ததாகும். மேலும் வருடம் முழுவதும் தங்கள் நிலங்களில் விளைந்த விளைபொருட்களின் ஒரு பகுதியை சுவாமிக்கு, விவசாயிகள் கொண்டு சேர்ப்பார்.
தற்போது கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் கடந்த 50 நாட்களாக கோயில் பக்தர்கள் தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் இப்பகுதியில் கோயிலை நம்பியுள்ள நூற்றுக்கணக்கான வியாபாரிகள் கவலை அடைந்துள்ளனர். மேலும் பக்தர்கள் குறிப்பிட்ட நேரத்தில் நேர்த்திக்கடன் செலுத்த வழியின்றி உள்ளனர். இந்நிலையில் வைகாசி வசந்த உற்சவ திருவிழா தேரோட்டம் நடக்குமா என்ற ஆவலில் உள்ளனர். ஆனால் கோயிலில் வழக்கமான பூஜை நடைமுறைகள் நடந்து வருகின்றன என்றும், ஊரடங்கு விலக்கிக் கொள்ளப் பட்டால் மட்டுமே திருவிழா நடப்பது குறித்து முடிவு எடுக்கப்படும் என கோயில் நிர்வாகிகள் தெரிவித்தனர்.