பதிவு செய்த நாள்
15
மே
2020
03:05
ஊட்டி : ஊட்டி அருகே, கோவில் வாசலில், பச்சிளம் குழந்தையை வீசி சென்றோரை, போலீசார் தேடி வருகின்றனர். ஊட்டி அருகே, கொல்லிமலை காந்திபுதுார் பகுதியில், மதுரை வீரன் கோவில் உள்ளது. நேற்று காலை, 8:00 மணிக்கு கோவில் வழியாக சென்ற பெண்கள், அங்கு பச்சிளம் குழந்தையின் அழுகுரல் கேட்டு, சென்று பார்த்தனர்.
கோவில் வாசலில், ஆண் பச்சிளம் குழந்தை, துணி போர்த்தப்பட்டு கிடந்தது. மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, குழந்தையை மீட்டு, ஊட்டி அரசு தலைமை மருத்துவமனை குழந்தைகள் பிரிவில், அனுமதித்தனர். கொலக்கம்பை போலீசார் வழக்கு பதிந்து, குழந்தையை வீசி சென்றவர்களை தேடி வருகின்றனர். அரசு தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர், டாக்டர் இரியன் ரவிக்குமார் கூறுகையில், ஆண் குழந்தை பிறந்து, ஏழு நாட்கள் இருக்கும். 2.6 கிலோ எடையில் நல்ல உடல் நலத்துடன் உள்ளது. சிகிச்சைக்கு பின், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு துறையிடம் ஒப்படைக்கப்படும், என்றார்.