பதிவு செய்த நாள்
16
மே
2020
10:05
திருப்பதி : நீண்ட நாட்களுக்கு பின், ஏழுமலையான் லட்டு பிரசாதம் விற்பனையை, தேவஸ்தானம் நேற்று துவங்கியது.
திருமலையில் ஏழுமலையான் தரிசனத்திற்கு, பக்தர்கள் அனுமதிக்கப்படா விட்டாலும், தினசரி நடக்கும் கைங்கரியங்களை, தேவஸ்தானம் நடத்தி வருகிறது. இந்த கைங்கரியங்களின் போது, ஏழுமலையானுக்கு பெரிய லட்டு, வடை உள்ளிட்ட பிரசாதங்கள், தினசரி, 500 எண்ணிக்கையில் தயாரிக்கப்பட்டு, படைக்கப்பட்டு வந்தது. இந்த பிரசாதங்களை, திருமலைக்கு செல்லும் தேவஸ்தான ஊழியர்கள், பாதுகாப்பு படை ஊழியர்கள், உள்ளூர் மக்கள் மட்டுமே பெற்று வந்தனர். இதனால், பிரசாதங்கள் தேக்கமடைய துவங்கின. இதையடுத்து, திருப்பதியில் உள்ள தேவஸ்தான தலைமை அலுவலகத்தில் நேற்று முதல், இந்த பிரசாதங்கள் விற்பனை துவங்கியது.இதன்படி, ஒரு பெரிய லட்டு, 200 ரூபாய், ஒரு வடை, 100 ரூபாய் என, 500 பெரிய லட்டுகளும், 500 வடைகளும் விற்பனைக்கு வைக்கப்பட்டன. இரண்டு மணி நேரத்தில் முழுதும் விற்று தீர்ந்தன. தினமும் இந்த லட்டு, வடை பிரசாதம் விற்பனை நடக்கும் என, தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.