பதிவு செய்த நாள்
08
ஜூன்
2020
11:06
கொரோனா நோய் தொற்று பரவல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால், கடந்த மார்ச் 25ம் தேதியில் இருந்து அனைத்து வழிபாட்டு தலங்களும் மூடப்பட்டன. பூஜை மட்டும் நடத்த அனுமதிக்கப்பட்டது. தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.
இந்நிலையில், 5ம் கட்ட ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டன. அதன்படி இன்று (ஜூன் 8) வழிபாட்டு தலங்களை திறக்க மத்திய அரசு அனுமதி வழங்கியது. இது குறித்து மாநில அரசுகளே முடிவு செய்து கொள்ளலாம் என அறிவித்த மத்திய அரசு, வழிபாட்டு தலங்களில் மேற்கொள்ள வேண்டிய கட்டுப்பாடுகளையும் வெளியிட்டது. இதன்படி, 75 நாட்களுக்கு பிறகு நாட்டின் பல்வேறு பகுதிகளில் இன்று வழிபாட்டு தலங்கள் திறக்கப்பட்டன.
கர்நாடக மாநிலம் கல்புர்கி மாவட்டத்தில் உள்ள சரண பஷவேஸ்வரா கோயில் திற்கப்பட்டது. பக்தர்கள் சமூக இடைவெளியுடன் வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர். மாஸ்க் அணிந்திருந்த அவர்கள், கோவிலுக்குள் நுழைவதற்கு முன்னர் கைகளை சானிடைசர் மூலம் தூய்மைப்படுத்தினர். பெங்களூருவில் உள்ள பசவங்குடியில் உள்ள கணபதி கோவில் திறக்கப்பட்டதை தொடர்ந்து அங்கு சென்று பக்தர்கள் வழிபாடு நடத்தினர்.
உ.பி., மாநிலம் லக்னோவில் உள்ள யஹியகஞ்ச் குருத்வாராவும் வழிபாட்டிற்காக திறக்கப்பட்டது. கோரக்பூரில் உள்ள கோயிலில் முதல்வர் யோகி ஆதித்யநாத் வழிபாடு நடத்தினார். சம்பல் மாவட்டத்தில் உள்ள சமுண்டா கோவிலிலும் வழிபாடு நடந்தது. டில்லியில் உள்ள சிஸ்கஞ்ச் சாகிப் குருத்வாரா திறக்கப்பட்டதை தொடர்ந்து அங்கு பக்தர்கள் வழிபாடு நடத்தினர். அங்கு வரும் பக்தர்களுக்கு காய்ச்சல் உள்ளதா என பரிசோதனை செய்யப்பட்டது. டில்லியின் லோதி சாலையில் உள்ள சாய்பாபா கோவிலும் திறக்கப்பட்டது. பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் பொற்கோயில் திறக்கப்பட்டதை தொடர்ந்து, அங்கு சென்ற பக்தர்கள் வழிபாடு நடத்தினர். சமூக இடைவெளியை கடைபிடிப்போம். பொற்கோவிலில் மருந்து தெளிக்கப்பட்டு தூய்மைபடுத்தப்பட்டதுடன், அங்கு வரும் பக்தர்களுக்கு காய்ச்சல் உள்ளதா என பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. மாஸ்க் அணிதல், கைகளை கழுவுதல் உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்போம் என பக்தர்கள் தெரிவித்தனர். லூதியானாவில் உள்ள துர்கா மாதா கோயிலில் பக்தர்கள் வழிபாடு நடத்தினர்.
புதுச்சேரியிலும் வழிபாட்டு தலங்கள் திறக்கப்பட்டன. புதுச்சேரி மணக்குள விநாயகர் கோவில், திருநள்ளாறு சனீஸ்வரன் கோவில், காரைக்கால் பள்ளிவாசல் என முக்கிய வழிபாட்டு தலங்கள் இன்று திறக்கப்பட்டன. பக்தர்கள் தனி மனித இடைவெளியுடன் வழிபாடு நடத்தி வருகின்றனர். சானிடைசர் மூலம் கைகளை சுத்தம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. உடல் வெப்ப பரிசோதனை நடக்கிறது. உத்தர்கண்ட் மாநிலம் டேராடூனில் உள்ள மாதா வைஷ்ணவ தேவி கோவில் திறக்கப்பட்டது. காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை கோயில் திறந்திருக்கும். வெளிமாநில பக்தர்களுக்கு அனுமதியில்லை என மாநில நிர்வாகம் முடிவெடுத்துள்ளது. டில்லியில் உள்ள வேளாங்கண்ணி தேவாலயம் திறக்கப்பட்டது. அங்கு வருபவர்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் குறியிடுகள் வரையப்பட்டிருந்தன. கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள புனித மேரி தேவாலயம் திறக்கப்பட்டதை தொடர்ந்து அங்கு சென்ற கிறிஸ்தவர்கள் பிரார்த்தனை செய்தனர். டில்லியின் பதேபுரி மசூதி, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, இன்று திறக்கப்பட்டது. இதேபோல், உ.பி., உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் மசூதிகள் திறக்கப்பட்டன.