பதிவு செய்த நாள்
10
ஜூன்
2020
10:06
சென்னை; துாத்துக்குடி மாவட்டம், ஆதிச்சநல்லுாரில் நடக்கும் அகழாய்வில், முதுமக்கள் தாழிகள் கண்டெடுக்கப்பட்டு உள்ளன.
துாத்துக்குடி மாவட்டம், ஆதிச்சநல்லுாரில், 3,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட, ஈமக்காடு உள்ளது.இங்கு, இறந்த மனிதர்களையும், அவர்கள் பயன்படுத்திய பொருட்களையும், முன்னோர் புதைத்து வைத்துள்ளனர்.நுாற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவுள்ள, இங்கு ஏற்கனவே, மத்திய தொல்லியல் துறையின் சார்பில், அகழாய்வுகள் நடைபெற்றுள்ளன.
கடந்த மாதம், 25ம் தேதி, தமிழக தொல்லியல் துறையின் சார்பில், மீண்டும் அகழாய்வு துவங்கியது. தற்போது அங்கு, ஆறு தொல்லியல் குழிகள் தோண்டப்பட்டுள்ளன. இவற்றில், இரண்டு முழுமையான தாழிகளும், ஆறு சிதிலமடைந்த தாழிகளும் வெளிப்பட்டுள்ளன. இதுகுறித்து, ஆதிச்சநல்லுார் அகழாய்வுப் பிரிவு இயக்குனர் பாஸ்கர், கூறியதாவது: ஆதிச்சநல்லுார், அனைவரும் அறிந்த தொல்லியல் பரம்பு. இங்கு, தற்போது கிடைத்துள்ள முதுமக்கள் தாழிகளுக்குள் உள்ளவற்றை, இன்னும் ஆய்வு செய்யவில்லை. தற்போது, முதற்கட்ட குழிகள் தோண்டும் பணிகள் தான் நடக்கின்றன. ஆய்வின் முடிவில் தான், தாழிகள் திறக்கப்படும். அவற்றில் உள்ள பொருட்கள் பற்றிய தகவல்கள், அப்போது தான் தெரியவரும்.இவ்வாறு, அவர் கூறினார்.