பதிவு செய்த நாள்
10
ஜூன்
2020
02:06
சென்னிமலை: கொடுமணலில் நடந்து வரும் அகழாய்வில், ௨,௦௦௦ ஆண்டுக்கு முற்பட்ட, ரோமானிய நாணயம் கிடைத்துள்ளது.
தமிழகத்தில், கீழடி மற்றும் ஆதிச்சநல்லுார் போன்ற இடங்களில், தொல்லியல் துறையினர் அகழாய்வு பணி மேற்கொண்டுள்ளனர். இந்த வரிசையில், ஈரோடு மாவட்டம், சென்னிமலை அருகே, நொய்யல் நதிக்கரை நகராக விளங்கிய, கொடுமணல் ஊராட்சிக்கு உட்பட்ட பாண்டியன் நகரில், கடந்த மாதம், 27ம் தேதி அகழாய்வு பணி தொடங்கியது. தமிழக தொல்லியல் துறை அகழ்வாய்வு இயக்குனர் ரஞ்சித், கோவை மண்டல உதவி இயக்குனர் நந்தகுமார் தலைமையில், 14 நாட்களாக அகழாய்வு நடந்து வருகிறது. இதுவரை இரும்புகள், பளிங்கு கற்கள், கல்மணி சங்குகள், வளையல் கண்ணாடிகள், கற்கள் பட்டை தீட்ட பயன்படும் கருவிகள், ௨,௦௦௦ ஆண்டுக்கு முற்பட்ட ரோமானிய நாணயம் உள்ளிட்ட அரியவகை பொருட்கள் கிடைத்துள்ளன. மனித எலும்புகள், சரளை மண் ஓடுகள், வீடுகளின் தரைத்தளம், சுடுமண்ணாலான நெசவு தொழில் பயன்பாட்டு பொருட்களும் சேகரிக்கப்பட்டுள்ளது. கீழடி, ஆதிச்சநல்லுாரில் கிடைக்கப்பெறாத, மூத்தோரை புதைத்து பாதுகாத்த முதுமக்கள் தாழிகளும் கிடைக்கப் பெற்றுள்ளன. வரும் செப்., மாதம் இறுதிவரை, அகழ்வாய்வு நடக்கும் என தெரிகிறது. நான்கு அதிகாரிகள், ஆராய்ச்சி மாணவர்கள், உள்ளூர் பணியாளர்கள் என, 30க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டுள்ளனர். தற்போது கிடைத்துள்ள பொருட்கள் மூலம், ஆப்கான், ரோமாபுரி உள்ளிட்ட இஸ்லாமிய நாடுகள், தமிழகத்துடன் வணிகத் தொடர்பில் இருப்பது தெரிய வந்துள்ளது.