முல்லா எவ்வளவு பெரிய ஆபத்து வந்தாலும் பேச்சுத்திறமையால் தப்பித்து விடுவார் என்றும் சிலர் பேசிக் கொண்டனர். நகர்வலம் சென்ற மன்னர் இதைக் கேட்க நேர்ந்தது. அதைச் சோதிக்க எண்ணி முல்லாவை அரண்மனைக்கு வரவழைத்தார். ‘‘முல்லா... உமது பேச்சுத்திறமைக்கு ஒரு சோதனை வைக்கப்போகிறேன். ஏதேனும் ஒரு விஷயத்தை இப்போது நீங்கள் சொல்லுங்கள். அது உண்மையாக இருந்தால் உமது தலை வெட்டப்படும். சொல்வது பொய் என்றால் துாக்கிலிடப்படுவீர்கள்’’ என்றார் மன்னர். உண்மையைச் சொன்னாலும், பொய்யை சொன்னாலும் ஆபத்து உறுதி என்ற நிலையில் அனைவரும் முல்லாவையே பார்த்தனர். முல்லா சிரித்தபடி, ‘‘அப்படியானால் மன்னா! தாங்கள் என்னை துாக்கிலிடுவீர்கள் தானே!’’ என்றார். அதைக் கேட்ட மன்னர் திகைப்படைந்தார். என்ன செய்வது என புரியாமல் விழித்தார். முல்லா சொன்னது உண்மையானால் அவரது தலை வெட்டப்பட வேண்டும். இல்லாவிட்டால் அவர் கூறிய விஷயம் பொய்யாகிவிடும். முல்லா கூறியது பொய் என என்றால் அவர் துாக்கில் இடப்பட வேண்டும். இல்லாவிட்டால் சொன்னது உண்மையாகிவிடும். இரண்டுமே செய்ய முடியாமல் குழப்பத்தை உருவாக்கினார் முல்லா. முல்லாவின் அறிவாற்றால் கண்ட மன்னர் வியந்தார். அவருக்கு பரிசுப்பொருட்களை கொடுத்தனுப்பினார். ‘‘ வரும் போது ஒன்றும் இல்லாதவராக வந்த முல்லா, போகும்போது பரிசுப் பொருட்களை கொண்டு செல்கிறாரே’’ மக்கள் ஆச்சரியப்பட்டனர்.