ஒருமுறை முல்லா வியாபார விஷயமாக வெளியூர் சென்றார். வியாபாரத்தை முடித்து அன்றிரவு ஒரு விடுதியில் தங்கினார். அப்போது எளிமையாக இருந்த முல்லாவை யாரும் ஒரு பொருளாக மதிக்கவலலை. முல்லாவிற்கு இரவில் தாகம் எடுத்தது. அறையில் தண்ணீர் இல்லாததால் வெளியே வந்த முல்லா, சில பணியாளர்கள் கும்பலாக உட்கார்ந்து பேசுவதைக் கண்டார். அதில் ஒருவரிடம் தண்ணீர் வேண்டுமெனக் கேட்டார். அவரோ அதை பொருட்படுத்தாமல் மறுபடியும் பேசத் தொடங்கினார். இப்படி முல்லா அங்குள்ள அனைவரிடமும் தண்ணீர் வேண்டுமென கோரிக்கை வைத்தார். யாரும் பொருட்படுத்தவில்லை. முல்லாவுக்கு நாவறட்சி அதிகமானது. அவருக்கு ஒரு யோசனை தோன்றியது. திடீரென ‘‘நெருப்பு! நெருப்பு!’’ என அலறினார் முல்லா. இதைக் கேட்ட பணியாளர்கள் பதறி அடித்து அறையில் இருந்த தண்ணீர் குடங்களை வெளியே எடுத்து வந்தனர். முல்லாவிடம், ‘‘ஐயா! எங்கே தீப்பற்றியது’’ என பரபரப்புடன் கேட்டனர். அப்போது ஒரு குவளையை எடுத்து அவர்கள் கொண்டு வந்த குடத்தினுள் இருந்த தண்ணீரை எடுத்துக் குடித்தார். தாகம் தீர்ந்த முல்லா, ‘‘அப்பாடா! தீ அணைந்து விட்டது’’ எனக் கூறினார். பணியாளர்களுக்கு ஒன்றும் புரியவில்லை. ‘‘நெருப்பு பற்றியதாகச் சொன்னீர்களே! எங்கே?’’ என கோபத்துடன் கேட்டனர். ‘‘நெருப்பு என் வயிற்றுக்குள் தான் பற்றியது. இப்போது அணைத்து விட்டேன்’’ என்று சிரித்தார். இப்படி முல்லா நெருப்பை பெயரை சொல்லி தனது தாகத்தை தீர்த்துக் கொண்டார்.