பதிவு செய்த நாள்
15
ஜூன்
2020
01:06
மயிலாடுதுறை: திருக்கடையூர் கோவி லில், ஊரடங்கு காரணமாக, 5,000 திருமணங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மற்ற மாநிலங்களை போல, வழிபாட்டுத் தலங்களை திறக்க, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து உள்ளது.
நாகை மாவட்டம், தரங்கம்பாடி தாலுகா, திருக்கடையூரில், தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான, அபிராமி சமேத அமிர்தகடேஸ்வரர் சுவாமி கோவில் அமைந்துள்ளது. இத்தலத்தில், நாள்தோறும் ஏராளமான பக்தர்கள், ஆயுள் விருத்தி வேண்டி, சிறப்பு ஹோமம் மற்றும் பூஜைகள் செய்வர்.மேலும், 59 வயது முடிந்து, 60 துவங்குபவர்கள் மற்றும் 61, 70, 75, 80, 90, 100 வயது பூர்த்தி அடைந்தவர்கள், தம்பதி சமேதராய், முறையே உக்ரரத சாந்தி, சஷ்டியப்த பூர்த்தி, பீமரத சாந்தி, விஜயரத சாந்தி, சதாபிஷேகம், கனகாபிஷேகம், சொர்ணாபிஷேகம் ஆகிய சிறப்பு பூஜைகள், ஹோமங்களை செய்து மாங்கல்யம் அணிவித்து, சுவாமி - அம்பாளை வழிபடுவர்.மற்ற கோவில்களில், முகூர்த்த நாட்களில் மட்டுமே திருமணம் நடக்கும்.
ஆனால், இக்கோவிலில் ஆண்டு முழுதும், நட்சத்திரம் மட்டுமே கணக்கில் கொள்ளப்பட்டு திருமணங்கள் நடைபெறும்.இவ்வாறு, தினமும், 60 திருமணங்கள் நடக்கும். தற்போது, ஊரடங்கு காரணமாக, 70 நாட்களுக்கு மேல் கோவிலில் வழிபாடு நடத்த தடை நீடிக்கிறது. இக்கோவிலில் நடக்க இருந்த, 5,000த்துக்கும் மேற்பட்ட திருமணங்கள் மற்றும் சிறப்பு ஹோமங்கள் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன. கோவிலை மட்டுமே நம்பி வாழும் அர்ச்சகர்கள், சிப்பந்திகள், பூஜை பொருட்கள் விற்பனை செய்பவர்கள், பூ வியாபாரிகள், புகைப்படக் கலைஞர்கள் என, ஆயிரக்கணக்கானோர் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து உள்ளனர். எனவே, லட்சக்கணக்கான பக்தர்களின் நம்பிக்கையை கருத்தில் கொண்டு, மத்திய அரசின் வழிகாட்டுதல்படி, மற்ற மாநிலங்களில் கோவில்கள் திறக்கப்பட்டது போல, தமிழகத்தில் உள்ள கோவில்களையும் திறக்க வேண்டும் என, பக்தர்கள் வலியுறுத்தி உள்ளனர்.