பதிவு செய்த நாள்
16
ஜூன்
2020
11:06
ஓசூர்: நாடு முழுவதும், கொரோனா தொற்றால் பல லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா ஊரடங்கால், கோவில்களில் தரிசனத்துக்கு கடந்த மார்ச், 20 முதல் பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கிருஷ்ணகிரி மாவட்ட அகில பாரத ஹிந்து மகா சபா ஆலய பாதுகாப்பு பிரிவு சார்பில், ஓசூர் மரகதாம்பிகை உடனுறை சந்திரசூடேஸ்வரர் சுவாமிக்கு, மனு கொடுக்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. கொரோனா தொற்றை தடுத்து, பக்தர்களுக்கு சுவாமி தரிசனம் தந்து, ஆசி வழங்க வேண்டும் என, சுவாமிக்கு மனு எழுதி கொடுத்தனர். சுவாமி பெயரில் எழுதப்பட்ட மனு என்பதால், கோவில் உண்டியலில் போடுமாறு, ஹிந்து சமய அறநிலையத்துறை அலுவலர்கள், ஆலய பாதுகாப்பு பிரிவு மாவட்ட தலைவர் மணி, மாநில செயலாளர் நாகராஜ் மற்றும் நிர்வாகிகளிடம் கேட்டுக்கொண்டனர். ஆனால், கோவில் நடை சாத்தப்பட்டு இருந்ததால், கோவில் உண்டியலில் மனுவை போட முடியவில்லை. இதனால், கோவில் ஊழியர் ராஜா என்பவரிடம் மனுவை வழங்கிச்சென்றனர். கவுரவ தலைவர் முருகன் மற்றும் மாவட்ட அமைப்பு செயலாளர் கார்த்திக், உட்பட பலர் பங்கேற்றனர்.