பதிவு செய்த நாள்
16
ஜூன்
2020
01:06
திருப்பூர்:கட்டுப்பாடு, ஒழுக்கம், எழுதப்படாத நற்சட்டங்கள் நிறைந்த, முன்னோர் காலத்து வாழ்க்கை முறையின் ஒரு அங்கமாக விளங்கிய, 300 ஆண்டு பழமை வாய்ந்த ஊர்ச்சாவடி, பழமையின் மிச்சமாக காட்சியளித்து கொண்டிருக்கிறது.தமிழக மக்கள், பன்னெடுங்காலமாக இனக்குழு மற்றும் கூட்டு வாழ்க்கை முறையை பின்பற்றி வாழ்ந்தனர். முன்னோரின் வாழ்க்கை முறை, பாரம்பரியம் போன்றவற்றை, தொல்லியல் சான்றுகள் பறைசாற்றி வருகின்றன.
ஆங்காங்கே கிடைக்கும், தொல்லியல் சான்று மூலம், தமிழ் மக்களின் வாழ்வியல் சூழல், வாழ்வியல் முறைகளை அறிய முடிகிறது.திருப்பூர், வாவிபாளையத்தில் இருந்து, சேடர்பாளையம் செல்லும் வழியில் உள்ள செட்டிபாளையத்தில், மிகப்பழமையான ஊர்ச்சாவடி, பழமையின் மிச்சமாக காட்சியளித்துக் கொண்டிருக்கிறது. இச்சாவடி, ஆறு துாண்களுடன் இருப்பதால், அப்பகுதி மக்கள், ஆறுகால் சாவடி என, அழைக்கின்றனர். வீரராசேந்திரன் தொல்லியல் வரலாற்று ஆய்வு மைய இயக்குனர் ரவிக்குமார் கூறியதாவது; ஊர் மக்கள், கிராம அளவிலான தங்கள் தேவைகள், பிரச்னைகளை பேசி தீர்க்கும் இடமாக, ஊர்ச்சாவடிகள் இருந்தன. செட்டிபாளையத்தில் உள்ள, ஊர்ச்சாவடி, 300 ஆண்டு பழமையானதாக இருக்கலாம். தமிழர் வாழ்க்கை முறையை பிரதிபலிக்கும் சாட்சியாக இது உள்ளது. ஆங்கிலேயர் காலத்தில், தொழிலாளர்களுக்கு இங்கு வைத்து சம்பளம் வழங்குவதும் வழக்கம். கோடை காலங்களில், அவ்வழியாக வருவோரின் தாகம் தணிக்கும் தண்ணீர் பந்தல்களும், இங்கு அமைக்கப்பட்டிருப்பதாக அறியமுடிகிறது. வெளியூர் செல்லும் பயணிகள், இரவில் படுத்துறங்கவும், இச்சாவடியை பயன்படுத்தி உள்ளதாகவும், குறிப்புகள் உள்ளன.இவ்வாறு, அவர் கூறினார்.தற்போதும், அவ்வழியாக சென்று வருவோர், அங்கு ஓய்வெடுத்து செல்கின்றனர். பாரம்பரியம் சொல்லும் இக்கட்டடத்தை, பழமை மாறாமல் புதுப்பிக்க வேண்டும் என்பதே, பொதுவான எதிர்பார்ப்பு.