பதிவு செய்த நாள்
17
ஜூன்
2020
06:06
ஒருநாள் ஆண்டவர் யோனா என்ற தீர்க்கதரிசியிடம்,“ நீ நினிவே பட்டணத்திற்கு செல். அங்குள்ள மக்கள் தீய வழிகளில் செல்கிறார்கள். அவர்களை அதிலிருந்து விடுவித்து நன்மையின் பக்கம் திருப்பு’’ என்றார்.
நினிவேயில் அசிரீயர்கள் என்ற இனத்தவர் வசித்தனர். அவர்கள் இஸ்ரவேல் மக்களுக்கு எதிரானவர்கள். யோனாவோ இதுவரை இஸ்ரவேலர்களுக்கு தொண்டு செய்தவர். எனவே தனது உபதேசத்தை நினிவே மக்கள் கேட்கமாட்டார்கள் எனக் கருதினார். அது மட்டுமின்றி, அந்த மக்கள் ஆண்டவரின் கோபத்துக்கு ஆளாகி அழிந்து போகட்டும் என்றும் முடிவெடுத்தார்.
எனவே அவர் நினிவேவுக்கு செல்லாமல் தர்ஷிஸ் என்னும் ஊருக்கு கப்பலில் புறப்பட்டார். நடுக்கடலில் பயங்கர புயல் உருவானது. தன் கட்டளையை மீறிய யோனாவுக்கு பாடம் கற்றுத் தரவே ஆண்டவரே இத்தகைய சூழலை ஏற்படுத்தினார். கப்பல் உடையும் நிலைக்கு வந்தது. கப்பலின் தலைவன் பயணிகளிடம்,“மக்களே! நீங்கள் ஆண்டவரை வேண்டிக் கொள்ளுங்கள். கப்பலில் இருக்கும் பாரத்தை துாக்கி எறியுங்கள். உங்களை நீங்களே காப்பாற்றிக் கொள்ளுங்கள்,” என்றார்.
அப்போது யோனா கப்பலின் அடித்தளத்தில் துாங்கிக் கொண்டிருந்தார். அவரை சில பயணிகள் எழுப்பி கப்பலுக்கு ஏற்பட்டுள்ள ஆபத்தை விளக்கி, ஆண்டவரை பிரார்த்திக்கும்படி கூறினர். வேறு சிலரோ, இந்த ஆபத்தான சூழ்நிலைக்கு கப்பலில் இருக்கும் வேறு யாராவது காரணமா என அலசினர்.
அப்போது யோனா,“இதற்கு யாரும் காரணமல்ல, நானே காரணம். என்னை ஆண்டவர் என்னை நினிவேவுக்கு அனுப்பினார். நான் அவரது கட்டளையை மீறி உங்களோடு இந்தக் கப்பலில் ஏறினேன். என்னைத் தண்டிக்க நினைத்த ஆண்டவர் உங்களையும் சேர்த்து சிரமப்படுத்துகிறார். என்னைத் துாக்கி கடலில் எறிந்து விடுங்கள். கடல் கொந்தளிப்பு நின்று விடும்,” என்றார்.
கொந்தளிப்பு அதிகரித்தது. கப்பல் மூழ்க ஆரம்பித்ததும், ஒரு சிலர் தங்களை காப்பாற்ற எண்ணி யோனாவைத் துாக்கி கடலில் வீசினர். அந்த நிமிடமே கடல் அடங்கியது. பயணிகள் மகிழ்ந்தனர்.
கடலில் விழுந்த யோனாவை ஒரு மீன் விழுங்கியது. இவ்வாறு செய்ததும் ஆண்டவர் தான். அந்த மீனின் வயிற்றில் மூன்று நாட்கள் இருந்த யோனா, தன் தவறுக்கு ஆண்டவரிடம் மன்னிப்பு வேண்டி ஜெபித்தார். அவரது பிரார்த்தனையை ஆண்டவர் ஏற்றார். நினிவே சென்று மக்களை நல்வழிப்படுத்தும்படி தெரிவித்தார். உடனே மீனின் வயிற்றிலிருந்து வெளியேறி நினிவே சென்றார். ஆனாலும் அங்குள்ள மக்களை அவர் நல்வழிப்படுத்த விரும்பவில்லை. ஆண்டவர் இஸ்ரவேலர்களுக்கு மட்டுமே சொந்தம், மற்றவர்களுக்கு அல்ல என்று நினைத்தார்.
இப்போதும் ஆண்டவருக்கு யோனா மீது கோபம் ஏற்பட்டது. ஒரு ஆமணக்கு செடியை முளைக்கச் செய்து அதன் நிழலில் யோனாவை தங்கச் செய்தார். அடுத்த நாளே அதில் சில பூச்சிகளை உருவாக்கி அதை அழித்தார். வெப்பம் தாளாத யோனா சாகும் நிலைக்கு ஆளானார். செடியின் மீதும், பூச்சிகள் மீதும் கோபப்பட்டார்.
அப்போது ஆண்டவர்,“ ஒரு செடியின் மீது இவ்வளவு ஆத்திரப்படும் நீ, லட்சத்து 20 ஆயிரம் மக்கள் வசிக்கும் இந்த நகரைப் பற்றி கவலைப்பட்டாயா? ஆண்டவர் எல்லோர்க்கும் சொந்தமானவர்,” என்றார். யோனா அவரது கருத்தை ஏற்று, அந்த நகர மக்களை நல்வழிப்படுத்தினார்.