பதிவு செய்த நாள்
19
ஜூன்
2020
12:06
மும்பை : கொரோனா அச்சுறுத்தலால் மஹாராஷ்டிராவில் இந்த வருடம் விநாயகர் சதுர்த்தி விழாவை சிறப்பாகவும், மகிழ்ச்சியாகவும் கொண்டாட முடியாது என அம்மாநில முதல்வர் உத்தவ் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரசின் தாக்கம் இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நோய் பாதிப்பு அதிகமான மாநிலங்களில் மஹாராஷ்டிரா முன்னிலையில் உள்ளது. நோய் பாதிப்புகளால் நாட்டில் பல்வேறு வழிபாட்டு தலங்களும் மூடப்பட்டிருந்த நிலையில் படிப்படியாக திறக்கப்பட்டு பக்தர்கள் அனுமதிக்கப்ப்டடு வருகின்றனர். மாநில அரசின் பரிந்துரைக்கு ஏற்ப நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது. தொடர்ந்து, ஆக.,மாதத்தில் விநாயகர் சதுர்த்தி விழா வருகிறது. விநாயகர் சதுர்த்தி, இந்தியா மட்டுமின்றி பல்வேறு நாடுகளிலும் கொண்டாடப்பட்டு வருகிறது. ஆயினும் மஹாராஷ்டிராவில் 10 நாட்கள் வரை சிறப்பாக கொண்டாடப்படும்.
மஹா.,வில் தாராவி, மும்பை போன்ற நகரங்களில் கணபதி பாபா என்று பல்வேறு பெயர்களில் விநாயகர் வழிபாடு ஆடம்பரமாகவும், சிறப்பாகவும் கொண்டாடப்படும். பல்வேறு வண்ணங்களுடன், விதவிதமான கோலங்களுடன் விநாயகர் அமர்ந்த சிலைகளுக்கு வழிபாடு, ஊர்வலம் என நாடே விழாக்கோலமாக இருக்கும். பின்னர் கடல், ஆறுகளில் கரைப்பார்கள். விநாயகர் சிலை ஊர்வலத்தின்போது ஆயிரக்கணக்கானோர் கலந்து கொள்வார்கள். ஆனால் தற்போது கொரோனா பாதிப்புகளால் நாட்டில் பல்வேறு மாநிலங்களிலும் முக்கிய விழாக்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதுகுறித்து முதல்வர் உத்தவ் தாக்கரே விழா நடத்தும் குழுக்களுடன் வீடியோ கான்பரன்சிங்கில் பேசினார். அவர் கூறுகையில், மஹா.,வில் கொரோனா பாதிப்புகளால், விநாயகர் சதுர்த்தி விழாவை எளிமையாக கொண்டாட வேண்டும். அச்சுறுத்தல் இன்னும் முடிவிற்கு வரவில்லை. ஆகவே, கடந்த ஆண்டு போன்று ஆடம்பரம் மற்றும் மகிழ்ச்சியுடன் விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாட வாய்ப்பு இல்லை. விநாயகர் ஊர்வலத்தில் அதிக கூட்டத்திற்கு அனுமதி கிடையாது. சமூக பொறுப்பை மனதில் வைத்துக் கொண்டு விழாவை எளிமையாக கொண்டாடி உலக மக்கள் முன் உதாரணமாக திகழ வேண்டும். இவ்வாறு கூறினார்.