பதிவு செய்த நாள்
14
மே
2012
10:05
நகரி: திருப்பதி தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறுவதையொட்டி, போலீசார் ஆங்காங்கே சோதனை செய்வதால், உண்டியலில் செலுத்த காணிக்கை பணத்தை கொண்டு வர பக்தர்கள் தயங்குகின்றனர்.திருப்பதி சட்டசபை தொகுதிக்கு, வரும் ஜூன், 12ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. திருப்பதியில் காங்கிரஸ், தெலுங்கு தேசம், ஒய்.எஸ்.ஆர்., காங்கிரஸ், சி.பி.எம்., கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். கடந்த 10 நாட்களாக தொகுதி முழுவதும் தீவிர தேர்தல் பிரசாரம் நடந்து வருகிறது. திருப்பதி நகரை சுற்றி சோதனைச் சாவடிகள் ஏற்படுத்தி, போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். வாக்காளர்களுக்கு மது, பணம் பட்டுவாடா செய்யப்படுகிறதா என, தேர்தல் அதிகாரிகளும், போலீசாரும் கண்காணித்து வருகின்றனர். திருமலையில் வெங்கடேச பெருமாளுக்கு, பிரார்த்தனை செய்துகொள்ளும் பக்தர்கள், உண்டியலில் செலுத்த லட்சக்கணக்கில் கொண்டு வரும் பணமும், போலீசாரின் சோதனையில் சிக்கிக் கொள்கிறது. இதனால் பக்தர்கள் காணிக்கை செலுத்துவதை தள்ளிப்போட்டு வருவதால், உண்டியல் வருமானம் குறைந்துள்ளது.
கோடை விடுமுறையால் கூட்டம் நீடிப்பு: திருப்பதி வெங்கடேச பெருமாள் கோவிலில், வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய மூன்று நாட்களில், ஒன்றரை லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.வார விடுமுறையையொட்டி திருமலைக்கு வரும் பக்தர் கூட்டம் அதிகரிப்பதால் முடி காணிக்கை செலுத்தவும், தங்கும் விடுதிகளை பெறவும் நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.நேற்று பிற்பகல் நிலவரப்படி, திருமலையில் கியூ காம்ப்ளக்சின் அனைத்து வளாகங்களும் நிரம்பிய நிலையில், கோவிலுக்கு வெளியிலும், இலவச தரிசனம் செல்லும் பக்தர்கள் நீண்ட தூரம் வரை வரிசையில் காத்திருந்ததை காண முடிந்தது.இலவச தரிசனத்துக்கு 9 மணி நேரம், 300 ரூபாய் சிறப்பு நுழைவு தரிசனத்துக்கு 5 மணி நேரம், பாதயாத்திரை பக்தர்கள் 4 மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. கோவிலில் பக்தர்களின் துரித தரிசன வசதிக்காக தொலைதூர தரிசனம் அமல்படுத்தப்பட்டது.