சிதம்பரம் ஆனி திருமஞ்சன விழா: தீட்சிதர்களுக்கு கொரோனா சோதனை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
26ஜூன் 2020 12:06
சிதம்பரம் : சிதம்பரம் நடராஜர் கோவில் ஆனி திருமஞ்சன விழாவையொட்டி, தீட்சிதர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
கடலுார் மாவட்டம், சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆனி திருமஞ்சன விழா கடந்த 19ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. கொரோனா பரவல் காரணமாக பொது மக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ள நிலையில், கொடியேற்ற நிகழ்வின்போது, 50 தீட்சிதர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். வரும் 27ம் தேதி தேர் திருவிழா, 28ம் தேதி தரிசன விழாவும் நடைபெற உள்ளது. விழாக்களை கோவிலுக்குள் நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பான ஆலோசனை கூட்டம், சிதம்பரம் சப் கலெக்டர் விசுமகாஜன் தலைமையில் நடந்தது. இதில் தேர் மற்றும் தரிசன விழாவில் 150 தீட்சிதர்கள் மட்டுமே பங்கேற்க அறிவுறுத்தப் பட்டுள்ளது. பொது மக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இரு நாட்கள் நடைபெறும் விழாவில் பங்கேற்க உள்ள தீட்சிதர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது.இதனையடுத்து, அண்ணாமலைப் பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள் இருவர் உட்பட ஆறு பேர் அடங்கிய குழுவினர், நேற்று கோவில் வளாகத்தில் தீட்சிதர்களுக்கு கொரோனா பரிசோதனைக்காக உமிழ்நீர் எடுத்தனர்.